ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற ஏஜென்சி உரிமையாளர் கைது - அழகியமண்டபத்தில் பரபரப்பு
ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதுபற்றிய விவரம் வருமாறு.
நாகர்கோவில்,
தக்கலை அருகே பருத்தி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மரிய கிளாட்சன் (வயது 44), இவர் அழகியமண்டபம் பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இங்கு ரெயில், பஸ், விமான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து விற்று வருகிறார். இவரது ஏஜென்சியில் சட்டவிரோதமாக ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாக நாகர்கோவில் ரெயில்வே மத்திய பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார் வந்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையில் ரெயில்வே போலீசார் அந்த ஏஜென்சியில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அங்கிருந்த 2 கணினிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அதில் ஆன்லைனில் பல்வேறு போலி கணக்குகள் தொடங்கி, அதன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து போலீசார், ஏஜென்சி உரிமையாளர் மரிய கிளாட்சனை கைது செய்தனர். மேலும் அங்கு சட்டவிரோதமாக முன்பதிவு செய்து விற்பனைக்காக வைத்திருந்ததாக 21 ரெயில்வே முன்பதிவு டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story