3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 24 Nov 2020 1:09 AM IST (Updated: 24 Nov 2020 1:09 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி, 

தமிழகத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. 2 நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘நிவர்‘ புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.

எச்சரிக்கை கூண்டு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு கடலில் புயல் உருவாகி இருப்பது குறித்து எச்சரிக்கும் வகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

புயல் காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலைகள் சுமார் 3 மீட்டர் உயரத்துக்கு எழக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கடலுக்கு செல்லவில்லை

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

ஏற்கனவே மீன்பிடிக்க சென்று தங்குகடல் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கும் புயல் குறித்த எச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டம்

இதேபோல், நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதை ஏற்று கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி உள்பட நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

புயல் உருவாகி உள்ளதை தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் செய்யப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீப் தயாள், வடகிழக்கு பருவ மழை கண்காணிப்பு சிறப்பு அலுவலர் மூர்த்தி, திசையன்விளை தாசில்தார் ரகுமத்துல்லா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் உவரியில் உள்ள சுனாமி பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டனர்.

Next Story