விமான, ரெயில் பயணிகளுக்கு கெடுபிடி ‘கொரோனா இல்லை’ என்ற சான்று கட்டாயம்


விமான, ரெயில் பயணிகளுக்கு கெடுபிடி ‘கொரோனா இல்லை’ என்ற சான்று கட்டாயம்
x
தினத்தந்தி 24 Nov 2020 2:56 AM IST (Updated: 24 Nov 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி, குஜராத், கோவா, ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து வரும் விமான, ரெயில் பயணிகள் தங்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழை சமர்பிப்பது கட்டாயம் என்று மராட்டிய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மும்பை, 

நாடு முழுவதும் கொரோனா பரவல் தணிந்து இருந்த நிலையில், சில மாநிலங்களில் தீபாவளிக்கு பிறகு மீண்டும் வேகம் பிடித்துள்ளது.

புது கலக்கம்

குறிப்பாக டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் நாளுக்கு, நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கும் நிலைக்கு அந்த மாநிலங்கள் தள்ளப்பட்டு உள்ளன.

நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்திலும் தற்போது தான் நோய் பரவும் வேகம் குறைந்துள்ளது.

இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவுவது மராட்டியத்திற்கு புது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மராட்டிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

பயணிகளுக்கு கெடுபிடி

இதன் ஒரு பகுதியாக டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் இருந்து மராட்டியத்திற்குள் வருபவர்கள் கட்டாயம் கொரோனா இல்லை என்ற ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் இதற்கான மறுசீரமைக்கப்பட்ட வழிபாட்டுதல் நெறிமுறைகளை நேற்று மாநில அரசின் தலைமை செயலாளர் சஞ்சய் குமார் வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விமான பயணிகள்

டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கோவா மாநிலத்தில் இருந்து விமானம் மூலமாக மராட்டியம் வருபவர்கள் ஆர்.டி.-பி.சி.ஆர். கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு நோய் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பாக விமானம் மராட்டியத்தில் தரையிறங்கும் நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்கு முன்னதாக பயணிகள் தங்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு வழங்கியிருக்க வேண்டும். குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து பயணிக்கும் அனைத்து உள்ளூர் பயணிகளும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழை எடுத்துவர வேண்டும். விமான நிலையத்தில் பயணிகளை அனுமதிப்பதற்கு முன்னர் இந்த பரிசோதனை சான்றிதழை சரிபார்க்க இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கட்டணம் வசூல்

ஒருவேளை கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் மராட்டியம் வருபவர்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிலையங்களில் ஆர்.டி.- பி.சி.ஆர் சோதனை செய்யப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை விமான நிலையமே செய்து கொடுக்கும். அதற்கான கட்டணத்தையும் சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டும்.

சோதனைக்கு பின்னரே அவர்கள் வீட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள். சோதனையில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானால் அவர்களை தொடர்புகொள்ள வசதியாக தொடர்பு எண் மற்றும் முகவரி சேகரித்து வைக்கப்படும்.

கொரோனா இருப்பது உறுதியானால் தற்போது உள்ள நடைமுறைப்படி அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ரெயில் பயணிகள்

இதேபோல டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கோவா மாநில ரெயில் நிலையங்களில் இருந்தோ அல்லது இந்த மாநிலங்கள் வழியாகவோ ரெயில் மூலம் வரும் பயணிகள் மராட்டிய மாநிலத்திற்கு வருவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்பு மாதிரிகளை கொடுத்து ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பரிசோதனை சான்றிதழை கொண்டு வராத பயணிகளுக்கு ரெயில் நிலையங்களில் கொரோனா அறிகுறிகள் மற்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். இதில் அறிகுறிகள் அற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அறிகுறிகள் உள்ள பயணிகளுக்கு ஆன்டிஜென் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு சோதனைக்கு ஒத்துழைக்காதவர்கள் மற்றும் தொற்று இருப்பது உறுதியானவர்கள் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுவார்கள். இதற்கான முழு செலவையும் பயணிகளே ஏற்க வேண்டும்.

சாலை வழியாக...

மேலும் மேற்கண்ட மாநிலங்களில் இருந்து சாலை வழியாக வாகனங்களில் மராட்டியத்திற்கு வருபவர்களுக்கு மாநில எல்லைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதில் கொரோனா அறிகுறி இல்லாதவர்களே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அறிகுறி தென்படும் பட்சத்தில் அவர்கள் திரும்பி செல்ல வாய்ப்பு வழங்கப்படும். இல்லை எனில் அவர்களுக்கு ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மாநிலத்தில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானாலோ அல்லது சோதனை செய்துகொள்ள விரும்பவில்லை என்றாலோ கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான செலவை பயணிகளே ஏற்று கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story