மதுராந்தகத்தில் கியாஸ் சிலிண்டர் கசிவால் ஆம்னிவேன் தீப்பிடித்து எரிந்தது
மதுராந்தகத்தில் கோவில் குளத்தை சுற்றி நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேன், கியாஸ் சிலிண்டர் கசிவால் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் அடுத்தடுத்து ஜீப், மோட்டார் சைக்கிள்களில் பரவி எரிந்து நாசமானது.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் குளத்தை சுற்றி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை வாகன ஓட்டிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மதுராந்தகம் அடுத்த மளைப்பாளையத்தை சேர்ந்த நவீன் என்பவர் தனக்கு சொந்தமான ஆம்னி வேனை அங்கு நிறுத்திவிட்டு சென்றார்.
இதற்கிடையே கியாஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட அந்த மாருதி ஆம்னி வேனில், சிலிண்டர் கசிவு ஏற்பட்டு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயானது அருகிலிருந்த மற்றொரு ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் அடுத்தடுத்து பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த மதுராந்தகம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்தில் எரிந்து நாசம்
இதைத்தொடர்ந்து, வாகனங்களில் பரவிய தீ முழுவதும் அணைக்கப்பட்டு கட்டுக் குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் ஆம்னி வேன், ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் கருகி நாசமானது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் ஜின்னா கலில் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மதுராந்தகம்ஏரி காத்த ராமர் கோவில் குளம் சுற்றிலும் வாகன ஓட்டிகள் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதை மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story