ஆண்டிமடம் அருகே, வனப்பகுதியில் தைல மரக்கன்றுகள் நட எதிர்ப்பு; ஊழியர்களை கிராம மக்கள் முற்றுகை - சமையல் செய்ய முயன்றதால் பரபரப்பு


ஆண்டிமடம் அருகே, வனப்பகுதியில் தைல மரக்கன்றுகள் நட எதிர்ப்பு; ஊழியர்களை கிராம மக்கள் முற்றுகை - சமையல் செய்ய முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Nov 2020 9:45 PM GMT (Updated: 24 Nov 2020 1:44 AM GMT)

ஆண்டிமடம் அருகே அரசு வனப்பகுதியில் தைல மரக்கன்றுகள் நட எதிர்ப்பு தெரிவித்து, வன ஊழியர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அங்கு அவர்கள் சமையல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே காங்குழி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் சுமார் 850 ஏக்கரில் தைல மரக்காடுகள் உள்ளன. தைல மரக்காடுகள் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயம் செய்ய முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மேலும் காங்குழி கிராமத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் நீர் பற்றாக்குறை காரணமாக அதிகப்படியாக முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் சுமார் நூறு ஏக்கர் அளவில் தைல மரங்கள் வெட்டப்பட்டு, மீண்டும் தைல மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகளை வன ஊழியர்கள் செய்தனர். இதை அறிந்த காங்குழி கிராம மக்கள் அங்கு வந்து ஊழியர்களை முற்றுகையிட்டனர். அப்போது, இப்பகுதியில் தைல மர கன்றுகளை நடுவதால் நெல், கடலை, வாழை, கரும்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய முடியவில்லை. தைல மரங்களால் விவசாயம் பாதிக்கிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகி இருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே தைல மரக்கன்றுகளை நடவு செய்யக்கூடாது. அதற்கு மாற்றாக முந்திரிக்கன்றுகளை நடவு செய்தால் இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக் கும், என்று தெரிவித்தனர்.

அதிகாரிகள் இதற்கான தீர்வு சொல்லும் வரை, அந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்று கூறி அங்கேயே பாத்திரங்களை வைத்து சமையல் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் மதியழகன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மரக்கன்றுகள் நடுவதற்கான வேலையை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் கூறி தக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவர் கூறினார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story