புயல் காரணமாக சுற்றுப்பயணத்தில் மாற்றம்: பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி 27-ந் தேதி வருகை
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 27-ந் தேதி வருகை தருகிறார்.
பெரம்பலூர்,
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள நாளை (புதன்கிழமை) காலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கும், மதியம் அரியலூர் மாவட்டத்திற்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தருவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் வானிலை மாற்றத்தின் காரணமாக புயல், மழைக்கு வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் அடிப்படையில், பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த முதல்-அமைச்சர் ஆய்வு பணிகள் ரத்து செய்யப்பட்டு, வருகிற 27-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி வருகிற 27-ந் தேதி காலை 9.30 மணிக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலுவலக வளாகத்தில் அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார். மேலும் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் கொரோனா தடுப்பு பணிகளையும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் அனைத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தை முதல்-அமைச்சர் நடத்துகிறார்.
இதையடுத்து விவசாயிகள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்கிறார். பின்னர் அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவை முடித்து கொண்டு அரியலூருக்கு கார் மூலம் சென்றடைகிறார்.
மதியம் 2 மணிக்கு அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் கொரோனா தடுப்பு பணிகளையும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் அனைத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தை முதல்- அமைச்சர் நடத்தி முடித்து விட்டு மாலையில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் முதல்- அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு செய்யப்பட்டுள்ள பணிகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். முதல்- அமைச்சர் வருகையையொட்டி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story