தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயியை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்க வந்தனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மனைவி மற்றும் குழந்தையுடன் வந்த ஒருவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஓடி வந்து தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் இண்டூர் அருகே உள்ள கோரபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னசாமி (வயது 30) என தெரியவந்தது. தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சின்னசாமி கூறியதாவது:-
எனது விவசாய நிலம் வழியாக கடந்த ஆண்டு உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டது. உரிய இழப்பீட்டு தொகையை விரைவாக பெற்று தருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து அலைக்கழிப்புக்கு உள்ளானதால் கடந்த ஜனவரி மாதமே உயர் மின் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றேன். அப்போதும் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்பிறகு பல மாதங்களாகியும் இதுவரை எனக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story