ஜவளகிரி காப்புக்காட்டில் கிராம மக்கள் போட்டு சென்ற 9 நாட்டுத்துப்பாக்கிகள் - வனத்துறையினர் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்


ஜவளகிரி காப்புக்காட்டில் கிராம மக்கள் போட்டு சென்ற 9 நாட்டுத்துப்பாக்கிகள் - வனத்துறையினர் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 24 Nov 2020 3:30 AM IST (Updated: 24 Nov 2020 8:25 AM IST)
t-max-icont-min-icon

ஜவளகிரி காப்புக்காட்டில் உரிமம் இல்லாமல் வைத்திருந்த 9 நாட்டுத்துப்பாக்கிகளை கிராம மக்கள் போட்டு சென்றனர். அவற்றை வனத்துறையினர் மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் கடந்த 3-ந்தேதி 10 வயது மதிக்கத்தக்க பெண் யானையை சென்னமாலம் கிராமத்தை சேர்ந்த முத்துமல்லேஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாங்களாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தினார்கள். இதற்காக சென்னமாளம், சூளகுண்டா, நந்திமங்கலம், தேவர்பெட்டா, பேலகரை ஆகிய கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த கிராம மக்கள் ஜவளகிரி காப்புக்காட்டில் உள்ள கக்க மல்லேஸ்வரன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் போட்டு சென்றனர். அங்கு இருந்த 9 நாட்டுத்துப்பாக்கிகளை வனத்துறையினர் மீட்டனர். இந்த 9 நாட்டுத்துப்பாக்கிகளும் ஜவளகிரி வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அதை வன உயிரின காப்பாளர் பிரபு, உதவி வன பாதுகாவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், டாக்டர் பிரபாக்‌ஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த துப்பாக்கிகளை வனத்துறையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ஓசூர் வன உயிரின காப்பாளர் பிரபு கூறுகையில், அஞ்செட்டி, உரிகம், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி ஆகிய வனப்பகுதிகளில் ஏற்கனவே உரிமம் இன்றி வைத்திருந்த 29 நாட்டுத்துப்பாக்கிகளை கிராம மக்கள் ஒப்படைத்து உள்ளனர். நேற்று முன்தினம் 9 துப்பாக்கிகளை அவர்கள் ஒப்படைத்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 38 உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை கிராம மக்கள் ஒப்படைத்துள்ளனர். இந்த துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அப்போது ஜவளகிரி வனச்சரக அலுவலர் நாகராஜன், தேசிய காடு வளர்ப்பு தலைவர் முனிராஜ், ஊராட்சி தலைவர் நாகரத்தினம்மா மற்றும் வன பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story