சேலம் 4 ரோடு அருகே, காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு - மாரியம்மன் கோவிலிலும் திருட முயற்சி
சேலம் 4 ரோடு அருகே உள்ள காளியம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது. அதே போல மாரியம்மன் கோவிலிலும் திருட முயற்சி நடந்தது.
சேலம்,
சேலம் 4 ரோடு அருகே உள்ள பெரமனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1½ மணி அளவில் இந்த கோவிலின் உண்டியலை மர்ம நபர்கள் 3 பேர் உடைத்து கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார்.
இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வேகமாக ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் 3 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த கும்பல் வேறு எங்காவது கைவரிசை காட்டி உள்ளதா? என போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது 4 ரோடு அருகே அரிசிபாளையம் செல்லும் பாதையில் உள்ள காளியம்மன் கோவிலில் திருட்டு நடந்தது தெரியவந்தது. அதாவது, கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story