சாத்தூர் அருகே, சாலை வசதி கோரி கிராம மக்கள் திடீர் மறியல் - அதிகாரிகள் சமரசம்
சாத்தூர் அருகே சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தூர்,
சாத்தூரில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் அணைக்கரைப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து கத்தாளம்பட்டி, குமரெட்டியாபுரம், அம்மாபட்டி வழியாக செலும் சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி விட்டது.
மேலும் மழைக் காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
ஆனால் சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, சாலையை சீரமைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து சுமார் 1 மணி மணி நேரம் பாதிக்கப்பட்டது. அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக கிராம மக்கள் சிலர் மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story