கல்லல் அருகே, இடிந்த வீட்டில் வசிக்கும் மூதாட்டி - மழை பெய்தால் பயந்து நடுங்குவதாக பேட்டி
கல்லல் அருகே மழைக்கு இடிந்த வீட்டில் மூதாட்டி வசித்து வருகிறார். மழை பெய்தால் பயப்படுவதாக அவர் உருக்கமாக தெரிவித்து உள்ளார்.
கல்லல்,
தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, கல்லல், மானாமதுரை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இன்னும் பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. இந்நிலையில் காரைக்குடியை அடுத்த கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்த 67 வயதான மூதாட்டி மேரி என்பவரது ஓட்டு வீடு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பலத்த மழையின் போது இடிந்து விழுந்தது. அப்போது மூதாட்டி வெளியே சென்றிருந்ததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை.
வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததால் அந்த பகுதி மண்மேடாக குவிந்து கிடக்கிறது. மேரியின் கணவர் சூசை ஏற்கனவே இறந்து விட்டார். இவர் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-
சமீபத்தில் பெய்த பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்காமல் எனது வீடு இடிந்து விழுந்து விட்டது. எனக்கு இந்த வீட்டை தவிர வேறு இடம் கிடையாது. இதனால் இடிந்த வீட்டிலேயே தங்கி இருந்து வருகின்றேன். வீடு இடிந்து 4 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் யாரும் இங்கு வந்து ஆய்வு செய்யவில்லை. தற்போது புயல் உருவாகி உள்ளதால் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனக்கு எந்த ஆதரவும் இல்லாததால் இந்த இடிந்த வீட்டில் தொடர்ந்து வசித்து வருகின்றேன். மழை பெய்தால் எங்கே வீடு இடிந்து கீழே விழுந்து விடுமோ என பயந்து நடுங்கி வருகின்றேன். இரவு நேரத்தில் பாம்பு, பூரான் உள்ளிட்ட பூச்சிகள் வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எனது வீட்டை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story