கள்ளக்குறிச்சி அருகே, குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி - தாத்தா இறந்த துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் நிகழ்ந்த பரிதாபம்


கள்ளக்குறிச்சி அருகே, குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி - தாத்தா இறந்த துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் நிகழ்ந்த பரிதாபம்
x
தினத்தந்தி 24 Nov 2020 3:30 AM IST (Updated: 24 Nov 2020 8:53 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். தாத்தா இறந்த துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் நிகழ்ந்த பரிதாப சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொளஞ்சி, மணி. உறவினர்களான இவர்கள் இருவரும் குடும்பத்துடன் பெங்களூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். கொளஞ்சி மகன் கவுதம்(வயது 19) அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2, மணிமகன் தீபக்(18) பிளஸ்-1 படித்து வந்தனர்.

இந்த நிலையில் மலைக்கோட்டாலம் கிராமத்தில் வசித்து வந்த தங்களின் தாத்தா இறந்த துக்கம் விசாரிப்பதற்காக மாணவர்கள் இருவரும் தங்களது குடும்பத்துடன் கடந்த 25 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தனர். 30-வது நாள் சடங்குக்காக இவர்கள் சொந்த ஊரிலேயே தங்கி இருந்தனர்.

நேற்று கவுதம், தீபக் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மலைக்கோட்டாலம் காப்புக்காடு அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கவுதம், தீபக் இருவரும் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உடனே அவர்களை சக இளைஞர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதையடுத்து அங்கிருந்து ஓடோடி சென்று கிராமமக்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். உடனே அவர்கள் கல்குவாரி குட்டைக்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய கவுதம், தீபக் ஆகியோரை தேடினர். ஆனால் அதற்குள் அவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானதால் இருவரையும் பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வரஞ்சரம் போலீசார் கவுதம், தீபக் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன தாத்தாவின் துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் குட்டையில் மூழ்கி மாணவர்கள் பலியான சம்பவத்தால் மலைக்கோட்டாலம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Next Story