கோடநாடு கொலை வழக்கில் 8 பேர் ஆஜர் சாட்சிகளிடம் மறுவிசாரணை நடத்த மனு
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் ஊட்டி கோர்ட்டில் 8 பேர் ஆஜராகினர். சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கை 3 மாதங்களுக்குள் சென்னை ஐகோர்ட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டதால் அரசு தரப்பில் 41 சாட்சிகளிடம் விசாரணை முடிந்து உள்ளது. இந்தநிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து சயான், மனோஜ் ஆகிய இருவரை போலீசார் அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் உள்ள ஜித்தின்ராய், சதீசன், உதயகுமார், திபு, சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகிய 6 பேர் ஆஜராகினர். சம்சீர் அலி, பிஜின் ஆகிய 2 பேர் ஆஜராகவில்லை. இரண்டு பேர் ஆஜராகாதது குறித்து எதிர்தரப்பு வக்கீல்கள் விஜயன், செந்தில் ஆகியோர் மாவட்ட நீதிபதி வடமலையிடம் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது மனோஜ் எங்களுக்கு கோவை மத்திய சிறையில் வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை, உறவினர்களை பார்க்கவோ அல்லது பேசவோ அனுமதி மறுக்கப்படுகிறது என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதி அரசு வக்கீல் நந்தகுமாரிடம் சிறையில் உள்ள 2 பேருக்கு போதிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றார். இதையடுத்து அரசு தரப்பில் விசாரணை நடத்திய சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தவும், விசாரிக்கப்படாத முக்கிய சாட்சிகளான 19 சாட்சிகளை அழைத்து விசாரணை நடத்தவும் எதிர்தரப்பு தாக்கல் செய்த மனு குறித்து விசாரிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. இந்த மனு மீது வருகிற 30-ந் தேதி நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்று அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் சயான், மனோஜ் இருவரை போலீசார் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story