பவானி அருகே அரசு தந்த நிலத்தில் வீடு கட்டிக்கொடுக்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


பவானி அருகே அரசு தந்த நிலத்தில் வீடு கட்டிக்கொடுக்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2020 5:00 AM GMT (Updated: 24 Nov 2020 4:46 AM GMT)

பவானி அருகே அரசு தந்த நிலத்தில் வீடு கட்டிக்கொடுக்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பவானி,

ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வசித்துவரும் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சித்தோடு அருகே உள்ள கன்னிமார்கரடு பகுதியில் ஒவ்வொருவருக்கும் அரசு தலா 1.25 சென்ட் இலவச வீட்டு மனைக்கான பட்டா வழங்கியுள்ளது.

இதேபோல் மொடக்குறிச்சி வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களில் யார் யாருக்கு? எந்தெந்த அளவுகளில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்ற விவரம் முறையே இல்லாமல் ஒட்டுமொத்தமாக பட்டா தரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அரசு மொத்தமாக வழங்கிய நிலத்தை முறையே ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். மொடக்குறிச்சி பகுதியில் 30 பேருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்து மீண்டும் கன்னிமார்கரடு பகுதியிலேயே வழங்க வேண்டும். பசுமை வீடு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நேற்று பகல் 12 மணியளவில் சித்தோடு கன்னிமார்கரடு பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி இளங்கோ, ஈரோடு தாசில்தார் பரிமளாதேவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, மொடக்குறிச்சி பகுதியில் வழங்கப்பட்டுள்ள இடத்திற்கு மாற்றாக கன்னிமார்கரடு பகுதியிலேயே இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவில் முடிவு செய்யப்படும் என்றும், மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள கன்னிமார்கரடு பகுதி சமன் செய்து அளவீடு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தார்கள்.

இதை ஏற்றுக்கொண்டு மாலை 6.30 மணி அளவில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.

Next Story