கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்: ‘பெற்றோருடன் வாழ எனக்கு விருப்பமில்லை’ காதல் கணவருடன் சேர்த்து வைக்க நீதிபதியிடம் முறையிட்ட இளம்பெண் - ஈரோடு கோர்ட்டில் பரபரப்பு


கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்: ‘பெற்றோருடன் வாழ எனக்கு விருப்பமில்லை’ காதல் கணவருடன் சேர்த்து வைக்க நீதிபதியிடம் முறையிட்ட இளம்பெண் - ஈரோடு கோர்ட்டில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Nov 2020 5:00 AM GMT (Updated: 24 Nov 2020 5:28 AM GMT)

கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக ‘பெற்றோருடன் வாழ விருப்பமில்லாததால்’ தன்னை காதல் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என நீதிபதியிடம் இளம்பெண் முறையிட்டதால் ஈரோடு கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் நித்யானந்தன் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த சதீஸ் என்பவர் ஈரோடு குமலன்குட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் நித்யானந்தன் வேலை செய்தார். அப்போது அவருக்கும், சதீசின் அக்காள் மகளான காயத்திரிக்கும் (20) பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலுக்கு காயத்திரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 2-ந் தேதி நித்யானந்தனும், காயத்திரியும் வீடுகளில் இருந்து வெளியேறினார்கள். பின்னர் அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர். 3-ந் தேதி திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.

இதற்கிடையே கொடுமுடி போலீஸ் நிலையத்தில் காயத்திரி கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தனை கொடுமுடி போலீசார் விசாரணைக்காக அழைத்தனர்.

இதனால் காயத்திரியை அழைத்து கொண்டு நித்யானந்தன் கொடுமுடி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு காயத்திரி தனது காதல் கணவருடன் வாழ விரும்புவதாக போலீசில் தெரிவித்தார். இதனால் காயத்திரியை நித்தியானந்தனுடன் போலீசார் அனுப்பி வைத்தார்கள். அதன்பிறகு அவர்கள் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்கள்.

இந்தநிலையில் செல்போன் கடையின் உரிமையாளரான சதீஸ், நித்யானந்தனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்றும், ரங்கம்பாளையம் பத்திர பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து காயத்திரிக்கும், அவரது பெற்றோர் சொத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எழுதி கொடுத்து விட்டு சென்று விடுங்கள் என்றும் சதீஸ் கூறியுள்ளார்.

இதனால் நித்யானந்தன் தனது மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஈரோட்டுக்கு கடந்த 17-ந் தேதி காரில் வந்தார்.

ரங்கம்பாளையம் பகுதியில் பத்திர பதிவு அலுவலகத்துக்கு செல்லும் வழியில் காயத்திரியின் உறவினர்கள் காத்திருந்தனர். அங்கு நித்யானந்தன் தனது மனைவியை அழைத்து வந்ததும், அவர்கள் ஆயுதங்களுடன் வந்து காயத்திரியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நித்யானந்தன் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் காயத்திரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காதல் கணவரை மறந்துவிட்டு தங்களுடன் வந்துவிடுமாறு கூறியதாக தெரிகிறது. அதற்கு அவரும் பெற்றோருடன் இருப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார். மேலும், கடத்தல் வழக்கு நடந்து வருவதால் காயத்திரியை ஈரோடு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பெற்றோர் நேற்று அழைத்து சென்றார்கள்

அங்கு நீதிபதி மாலதியின் முன்னிலையில் காயத்திரி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பெற்றோருடன் தனக்கு வாழ விருப்பமில்லை என்றும், தனது காதல் கணவர் நித்யானந்தனை அழைத்து வந்து தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரியும் அவர் கூறியுள்ளார். இது அவரை அழைத்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நித்யானந்தனை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி மாலதி போலீசாருக்கு உத்தரவிட்டார். நித்யானந்தனை போலீசார் கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தினார்கள். அதன்பிறகு காதல் கணவரான நித்யானந்தனுடன் காயத்திரியை சேர்த்து வைத்து நீதிபதி அனுப்பி வைத்தார்.

ஈரோட்டில் பெற்றோருடன் வாழ விரும்புவதாக தெரிவித்துவிட்டு நீதிபதி முன்பு தனது காதல் கணவருடன் அனுப்பி வைக்குமாறு பெண் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story