‘நிவர்’ புயல் எதிரொலி: நாகை மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்; தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் - வாகனங்களுக்கு எரிப்பொருள் நிரப்ப பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது
‘நிவர்’ புயல் எதிரொலியாக நாகை மாவட்டத்தல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புயலை எதிர் கொள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். வாகனங்களுக்கு எரிப்பொருள் நிரப்ப பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
நாகப்பட்டினம்,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று(புதன்கிழமை) கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் அதிதீவிர புயலாக காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை பெய்தது. அவ்வப்போது விட்டு விட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேலும் வழக்கத்தை விட நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுக கடுவையாற்று பகுதியில் மீனவர்கள் தங்களது பைபர் படகு மற்றும் விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். துறைமுகம் இல்லாத மீனவ கிராமங்களில் பைபர் படகுகளை கடற்கரையை விட்டு 500 மீட்டர் தூரத்திற்கு எடுத்து சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கூரை வீட்டில் தார்பாய்கள் போடுவது என புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் பொதுமக்கள் மும்முரமாக ஈடுபட்டனர். வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்தினர்.
நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் புதிய பஸ் நிலையம், நாகூர், உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் மின் கம்பங்களை உரசும் மரங்களை வெட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நாகை, நாகூர், வேளாங்கண்ணி ஆகிய கடற்கரை பகுதியில் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று காலை முதலே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை நேரங்களில் கடற்கரைகளில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 140 வீரர்கள் 20 குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
வெள்ள மீட்பு பணிக்கு ரப்பர் படகு, மரம் அறுக்கும் கருவிகள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட நவீன உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன. நேற்று 1 மணிக்கு மேல் நாகை மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனால் நாகை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. புயலையொட்டி மார்க்கெட் மற்றும் கடைகளில் காய்கறி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. வாகனங்களுக்கு எரிப்பொருள் நிரப்ப வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.
வேதாரண்யம் கடற்கரை மற்றும் நகர் பகுதிகளிலும் முழுவதும் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் அலைகள் 6 அடி முதல் 7 அடி உயரத்திற்கு எழுந்தன. வேதாரண்யம் பகுதியில் நேற்று ஒரு மணி முதல் வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டு, பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை நிரப்ப பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குவிந்தனர். இதனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. புயல் முன்எச்சரிக்கை குறித்து வாகனங்களில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
கடற்கரை கிராமங்களான கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, மணியன் தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, ஆயக்காரன்புலம், மருதூர், தகட்டூர், வாய்மேடு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்று அங்குள்ள மீனவர்களையும் தாழ்வான பகுதியில் உள்ள கூரை வீடுகளில் உள்ள பொதுமக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அரசின் பாதுகாப்பு மைய கட்டிடங்களுக்கும் செல்ல அறிவுறுத்தினார்.
பாதுகாப்பு மையங்களில் உள்ள வசதிகளை பார்வையிட அமைச்சர் மின்சார வசதி உரிய ஜெனரேட்டர்களை எடுத்துவரவும், உணவு பொருட்களை பாதுகாப்பு மையங்களில் அதிக அளவில் கொண்டுவந்து, சமையலுக்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் துரிதபடுத்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது உடமைகளையும், வீடுகளையும் பாதுகாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூரை வீடுகளுக்கு மேல் கம்புகளை போட்டு கீற்றுகள் சேதமடையாமல் இருக்க கட்டி வைத்தும், ஓட்டு வீடுகளுக்கு கயிறு மற்றும் வலைகள் போட்டு கட்டியும் பாதுகாத்து வருகின்றனர்.பெரும்பாலான இடங்களில் உள்ள தென்னை மரங்கள், புளிய மரங்கள் போன்றவைகளை வெட்டப்பட்டன. பல்வேறு பகுதிகளில் உள்ள உயர்கோபுரங்களில் மின்விளக்குகள் கீழே இறக்கப்பட்டன. புயல், மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேதாரண்யத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story