நிதி நிறுவனம் மூடப்பட்டதால் மோதல்: என்ஜினீயரிங் பட்டதாரி வெட்டிக்கொலை - சகோதரர்கள் 3 பேர் கைது


நிதி நிறுவனம் மூடப்பட்டதால் மோதல்: என்ஜினீயரிங் பட்டதாரி வெட்டிக்கொலை - சகோதரர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2020 3:45 AM IST (Updated: 25 Nov 2020 7:53 AM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவனம் மூடப்பட்டதால் நடந்த மோதலில் என்ஜினீயரிங் பட்டதாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சகோதரர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை அருகே நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சாலியமங்கலம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கள்ளப்புலியூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 53). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவருடைய மகன் மணிகண்டன்(22). என்ஜினீயரிங் பட்டதாரி. செல்வம் வேலை பார்த்து வந்த நிதி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மூடப்பட்டது.

அந்த நிதி நிறுவனத்தில் சேமிப்பு தொகை செலுத்தி இருந்த அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விக்னேஷ்வரன்(28) என்பவர், நிறுவனம் மூடப்பட்டதால் கட்டிய பணத்தை திருப்பி தரும்படி செல்வத்திடம் கேட்டார். ஆனால் செல்வம் பணத்தை திருப்பி தராததால் விக்னேஷ்வரன் தரப்புக்கும், செல்வம் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் செல்வத்தின் மகன் மணிகண்டன் தஞ்சை அருகே நெல்லித்தோப்பு கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு நேற்று முன்தினம் இரவு வந்திருந்தார். அப்போது நெல்லித்தோப்பு-கோனூர் சாலையில் வயல் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நிதி நிறுவனம் மூடப்பட்டதால் ஏற்பட்ட மோதலில் விக்னேஷ்வரன் மற்றும் அவருடைய தம்பிகள் அன்பு(26), ஆனந்த்(21) உள்ளிட்டோர் சேர்ந்து மணிகண்டனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரன், அன்பு, ஆனந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நிதி நிறுவனம் மூடப்பட்ட மோதலில் என்ஜினீயரிங் பட்டதாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story