பொய்கை வாரச்சந்தை நவீனமயமாக்கப்படும் - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்
பொய்கை வாரச்சந்தை நவீனமயமாக்கப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
அணைக்கட்டு,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கை சத்தியமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை மற்றும் காய்கறி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையை வருடத்திற்கு ஒருமுறை ஏலம் எடுத்து வருகின்றனர். சுமார் 1½ கோடி வரை ஏலம் போகக்கூடிய இந்த வாரச்சந்தையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என வியாபாரிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பொய்கை வாரச்சந்தை நடக்கும் நாளான நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மழை காலங்களில் வெள்ள நீர் வெளியேறுவதற்கான கால்வாய் வசதி இல்லை என்றும், போதுமான கழிவறை வசதிகள் இல்லை என்றும் வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பொய்கை வாரச்சந்தை நவீனவசதிகளுடன் கூடிய சந்தையாக மாற்றப்படும் என்று கூறிய கலெக்டர், அதற்கான திட்ட வரைவுகளை உடனடியாக சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புங்கனூரில் அமைக்கப்பட்டுள்ள சந்தை வளாகத்தை போல இந்த சந்தையை அமைக்கலாம் எனவும் யோசனை கூறினார். பொய்கை வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிவிட்டு அவர்களுக்கு வேறு இடத்தை தயார் செய்து கொடுக்கும்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாரச்சந்தை ஒரு கோடிக்கு மேல் ஏலம் எடுக்கின்றனர். ஆனால் மாடுகளை ஏற்ற மேடை இல்லை. இரவு 8 மணி வரை காய்கறி வியாபாரம் நடைபெறுகிறது. ஆனால் மின்விளக்குகள் இல்லாததால் இருட்டில் வியாபாரம் செய்து வருகின்றனர். ஆகவே மின் விளக்குகளை அமைக்க வேண்டும் எனவும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க போதுமான வடிகால்வாய் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு மாடுகள் விற்பனை செய்வதற்கு ஒரு பகுதியையும், கோழி, ஆடுகள், காய்கறிகள் விற்பனைக்கு என தனித்தனியாக ஒரு பகுதியாகவும் பிரித்து வியாபாரம் செய்வதற்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் மற்றும் அணைக்கட்டு தாசில்தார் சரவணமுத்து அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இமயவரம்பன் மற்றும் வின்சென்ட் ரமேஷ்பாபு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெங்கடேசன், குமார பாண்டியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story