திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை இந்தமாதத்திற்குள் முடிக்கவேண்டும் - கலெக்டர் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண நிதிஉதவி திட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை இந்தமாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டபணிகள் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 வட்டாரங்களில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண நிதி உதவி திட்டங்களில் உள்ள நிலுவை பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். இலவச தையல் எந்திரம், குழந்தை திருமண தடுப்பு திட்டம், முதியோர் பாதுகாப்பு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நலத்திட்டங்களை அலுவலர்கள் ஆய்வு செய்து விரைந்து வழங்க வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகள் குறித்த விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். தற்போது கொரோனா தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் உடனுக்குடன் தீர்வு காணப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முன்னதாக திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 985 அங்கன்வாடி மையங்களின் பணிகளின் செயல்பாடு குறித்து அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை பாராட்டினார். கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஷ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், வட்டார வரிவாக்க அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story