புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கையாக பஸ் போக்குவரத்து நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கையாக மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை,
வங்க கடலில் உருவாகியுள்ள ‘நிவர்‘ புயல் இன்று (புதன்கிழமை) தமிழகத்தில் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பஸ், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மதியம் 1 மணி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை முதல் அரசு பஸ்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. பஸ் நிலையத்திலும் கூட்டம் அதிகமாக இல்லை. மதியம் 12.30 மணிக்கு மேல் படிப்படியாக பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதேபோல வெளியூர்களில் இருந்து புதுக்கோட்டை வந்த அரசு பஸ்களும் மதியம் 1 மணிக்கு மேல் ஒன்றன் பின் ஒன்றாக பணிமனைக்கு சென்றன. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் மதியம் 1 மணிக்கு மேல் இயங்கின. அதன்பின் தனியார் பஸ்களின் சேவையும் நிறுத்தப்பட்டன. பகல் 1 மணிக்கு முன்பாக தஞ்சாவூருக்கு கடைசியாக அரசு பஸ் இயக்கப்பட்ட போது அதில் இடம்பிடிக்க பயணிகள் ஓடிவந்து ஏறினர். பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட பின் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. டவுன் பகுதியில் இருந்து மாவட்டத்திற்குள் கிராமப் பகுதிகளுக்கு செல்ல பஸ்கள் இல்லாமல் பயணிகள் சிலர் தவித்தனர். பஸ் இயக்கப்படாததால் அவர்கள் பஸ் நிலையத்தில் காத்திருந்ததை காணமுடிந்தது. பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் சரக்கு வேன்களில் ஆட்களை ஏற்றி கிராமப்புற பகுதியில் இறக்கிவிட சிலர் தொடங்கினர். இதற்காக அவர்களிடம் பஸ் கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை சரக்கு வேன் டிரைவர்கள் வசூலித்தனர். ஒரு சில பயணிகளும் வேறுவழியின்றி அதில் ஏறி பயணம் செய்தனர்.
அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் பஸ்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டீசல் நிரப்பும் இடத்தில் மழை தண்ணீர் புகுந்து விடாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் இளங்கோவன் கூறுகையில், “புதுக்கோட்டை மண்டலத்தில் 380-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஆங்காங்கே பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பணிமனைகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிரைவர், கண்டக்டர்களை ஓய்வறையில் இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் மறு உத்தரவு வரும் வரை போக்குவரத்து சேவை தொடங்கப்படாது” என்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலர் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க தொடங்கி உள்ளனர். இருப்பினும் புயல் முன்னெச்சரிக்கையாக பலர் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.
Related Tags :
Next Story