அதிக கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பை இழந்த ஏழை மாணவர் - தமிழக அரசு மீண்டும் பரிசீலிக்க கோரிக்கை


அதிக கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பை இழந்த ஏழை மாணவர் - தமிழக அரசு மீண்டும் பரிசீலிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 Nov 2020 10:30 AM IST (Updated: 25 Nov 2020 11:01 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த ஏழை அரசு பள்ளி மாணவர் அதிக கட்டணம் செலுத்த இயலாது என்ற காரணம் கூறி ஒதுக்கீட்டை ஏற்க முடியாமல் திரும்பிய நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. மாற்றுத்திறனாளியான இவர் பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி. பட்டாசு தொழிலாளி. இவர்கள் இருவரும் தினசரி ரூ. 250 கூலியாக பெற்று வருகின்றனர். இவர்களது மகன் இம்மானுவேல்.

செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தவர் 457 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வில் 175 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருக்கு கலந்தாய்வின்போது தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் கல்வி கட்டணம் ரூ.4 லட்சம் வரை செலுத்த முடியாத நிலையில் இவர் தனியார் மருத்துவக்கல்லூரி இடத்தை ஏற்க முடியாமல் மனவேதனையுடன் ஊர் திரும்பினார்.

இந்தநிலையில் தமிழக அரசு தனியார் மருத்துவக் கல்லூரியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது.

எனவே ஏழை மாணவ, மாணவிகளுக்கும் தனியார் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு அரசு மீண்டும் வாய்ப்பு அளிக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். ஏழை பட்டாசு தொழிலாளியின் மகனான இவருக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு அரசு வாய்ப்பளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகமும் இவருக்கு மீண்டும் தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு அளிக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டியது அவசியமாகும்.

Next Story