‘நிவர்’ புயலால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 100 இடங்களில் முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்


‘நிவர்’ புயலால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 100 இடங்களில் முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2020 6:00 AM GMT (Updated: 25 Nov 2020 5:45 AM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 100 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நிவர் புயல் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கோட்டாட்சியர்கள் சுரேந்திரன், முத்துக்கழுவன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் கலெக்டர் மதுசூதன்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் கண்மாய்கள் உள்ளன. இதில் பல கண்மாய்கள் நிரம்பும் நிலையில் உள்ளன. அவ்வாறு மழையால் நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டால் அவைகளை சரிசெய்ய தேவையான மணல் மூடைகளை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மண் வீடுகள், குடிசைகள், மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்களில் இடியும் நிலையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களை முன் எச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பள்ளிக்கூடம், சமுதாயகூடங்கள் உள்பட 100 இடங்களில் முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மரங்களையும், மின்கம்பங்களையும் முன்கூட்டியே அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முக்கிய பயிர்களான நெல், மிளகாய், தென்னை, வாழை, பப்பாளி போன்றவை மழையால் சேதமடையாமல் தவிர்க்கவும் மழையால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் உள்ள பயிர்களை பாதுகாக்க முன்கூட்டியே வேளாண் துறை அதிகாரிகள் சென்று தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் தேவையான போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன.ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் முன்கூட்டியே இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நோய்கள் பரவாமல் தடுக்க குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நகராட்சி பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கும் பொதுமக்களுக்கு அம்மா உணவகங்கள் மூலமும், கிராம பகுதிகளில் உள்ள மையங்களில் தங்கும் மக்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழையினால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் தண்ணீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் மீட்பு பணியில் ஈடுபட 200 பேர் தயார் நிலையில்உள்ளனர். இவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குழுக்களாக பிரித்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் 10 நிமிடத்தில் செல்லும் வகையில் அவர்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் அவசர கால தேவைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story