கொடுமுடி அருகே பயங்கர விபத்து: அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் பலி
கொடுமுடி அருகே நடந்த பயங்கர விபத்தில் அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் பலியானார்கள்.
கொடுமுடி,
பெருந்துறை அருகே உள்ள வீரணாம்பாளையத்தை சேர்ந்தவர்கள் ரகுநாதன் (வயது 41), முருகசாமி (50), ஆனந்தன் (44), இவருடைய தம்பி தாமோதரன் (40). இவர்கள் 4 பேரும் சேர்ந்து பெருந்துறையில் விசைத்தறி வைத்து நடத்தி வந்தார்கள்.
இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் தொழில் விஷயமாக கரூர் செல்லவேண்டி இருந்தது. இதற்காக ஒரு காரில் நேற்று மதியம் சென்றுகொண்டு இருந்தார்கள். காரை தாமோதரன் ஓட்டினார்.
கொடுமுடி அருகே உள்ள க.ஒத்தக்கடை ஊரில் பள்ளக்காட்டூர் என்ற இடத்தில் கார் சென்றுகொண்டு இருந்தது. அப்போது கார் திடீரென நிலை தடுமாறி ரோட்டு ஓரத்தில் இருந்த மழைநீர் வடிகால் குழியில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் கார் மோசமாக நொறுங்கியது. உள்ளே இருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து காருக்குள்ளேயே பிணமானார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அதற்குள் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டுவிட்டார்கள்.
அதன்பின்னர் போலீசார் காருக்குள் இருந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் கொடுமுடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து நடந்த பள்ளக்காட்டூரில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இங்கு ஒரு தனியார் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நலன் கருதி அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு இறந்த 4 பேரின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
Related Tags :
Next Story