நாகர்கோவிலில் பரபரப்பு விஜயகுமார் எம்.பி. வீட்டு முன் வெடிகுண்டு வீச்சு
நாகர்கோவிலில் அ.தி. மு.க. எம்.பி. வீட்டு முன் வெடிகுண்டு வீசப்பட்டது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவில்,
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் விஜயகுமார். இவரது வீடு நாகர்கோவிலில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் மேற்கு வெள்ளாளர் காலனி சிதம்பரநாதன் தெருவில் அமைந்துள்ளது. விஜயகுமார் எம்.பி. கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி புறப்பட்டு சென்றார். இதனால் வீட்டில் அவருடைய குடும்பத்தினர் மட்டும் இருந்தனர்.
நேற்று காலை 8.30 மணியளவில் விஜயகுமார் எம்.பி.யின் கார் டிரைவர் ஷைஜு, எம்.பி. வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளிப்புற கேட் முன்பு ஒரு உருண்டையான வடிவத்தில் வெடிக்காத நாட்டு வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் ஒன்று கிடந்தது. இதைப்பார்த்து பயந்துபோன அவர் குழந்தைகள் அதை எடுத்து விளையாடி, விபரீதம் ஆகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அந்த பொருளை வீட்டின் முன்புறம் உள்ள சாலையோரம் நகர்த்தி போட்டார்.
வெடிகுண்டு
பின்னர் இதுகுறித்து விஜயகுமார் எம்.பி.யின் மகன் ரதீஷ்குமாரிடம் தகவல் தெரிவித்தார். அவர் டெல்லியில் இருக்கும் தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விஜயகுமார் எம்.பி. போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் நாகர்கோவில் துணை சூப்பிரண்டு வேணுகோபால், நேசமணிநகர் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெடிகுண்டு போன்ற மர்மபொருளை பார்வையிட்டனர்.
பின்னர் வெடிகுண்டு கண்டறியும் போலீசாரும், நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதலில் அந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்து, சோதனை செய்தனர். இதில் உருண்டை வடிவிலான பந்தில் வெடிபொருள் நிரப்பப்பட்டு, பந்தின் நடுப்பகுதியில் ஒரு குழாய் சொருகப்பட்டு இருந்தது. அதற்குள் இருந்த வெடிபொருள் பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் அலுமினிய பவுடர் போன்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னைக்கு அனுப்பி வைப்பு
பின்னர் அவற்றை பாதுகாப்பாக ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர், கியூ பிராஞ்ச் போலீசார் உள்ளிட்டோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் விஜயகுமார் எம்.பி. வீட்டு முன்பு வெடிபொருளை வீசிச் சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் என்ன வகையை சேர்ந்தது? அதில் என்ன மருந்து நிரப்பப்பட்டு இருந்தது? என்பதை அறிவதற்காக போலீசார் அதை சென்னைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக விஜயகுமார் எம்.பி. சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே தகவல் அறிந்த தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் நேற்று உடனே செல்போன் மூலம் டெல்லியில் உள்ள விஜயகுமார் எம்.பி.யை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் நேற்று மதியம் அவருடைய வீட்டுக்குச் சென்று வெடிபொருள் கிடந்த இடத்தை பார்வையிட்டார். மேலும், விஜயகுமார் எம்.பி.யின் மகன் ரதீஷ்குமாரிடம் இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story