தனது தாயை கடத்தி வைத்து தன்னிடம் இருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரித்ததால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணராஜா பேட்டை தாலுகாவில், தனது தாயை கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டி தன்னிடம் இருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான நிலத்தை தொழில் அதிபர் ஒருவர் அபகரித்துக் கொண்டதால் மனமுடைந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மண்டியா,
மண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜா பேட்டை தாலுகா மாவினகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவா(வயது 54). விவசாயியான இவருக்கு அப்பகுதியில் சொந்தமான விவசாய நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த நிலத்தை தங்களிடம் விற்றுவிடுமாறு கிருஷ்ணராஜா பேட்டையை சேர்ந்த தொழில் அதிபரான கோவிந்தேகவுடா மற்றும் அவரது மகன் ரவீஷ் ஆகியோர் மகாதேவாவிடம் கேட்டுள்ளனர். ஆனால் தன்னுடைய நிலத்தை யாருக்கும் விற்பதாக இல்லை என்று மகாதேவா திட்டவட்டமாக கூறி வந்தார்.
ஆனால் மகாதேவாவின் நிலத்தை அடைய எண்ணிய கோவிந்தேகவுடாவும், அவரது மகன் ரவீசும் சேர்ந்து ஒரு சதித்திட்டம் தீட்டினர். அதாவது மகாதேவாவின் தாய் புட்டம்மாவை அவர்கள் தங்களது வீட்டுக்கு கடத்திச் சென்றனர்.
பின்னர் அவர்கள் மகாதேவாவை தொடர்பு கொண்டு நிலத்தை உடனடியாக தங்களுக்கு விற்றுவிட வேண்டும், அப்போதுதான் உனது தாயை விடுவிப்போம் என்று மிரட்டி உள்ளனர். இந்த மிரட்டலுக்கு பயந்த மகாதேவாவின் குடும்பத்தினர், அந்த நிலத்தை கோவிந்தேகவுடாவுக்கு விற்றுவிட்டனர். அதன்பிறகுதான் மகாதேவாவின் தாய் புட்டம்மா விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த மகாதேவா நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் அவர்கள் இதுபற்றி கிருஷ்ணராஜா பேட்டை புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் மகாதேவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தன்னுடைய நிலத்தை தொழில் அதிபர் கோவிந்தேகவுடா அபகரித்துக் கொண்டதால் மனமுடைந்து மகாதேவா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story