குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்துகொண்ட 43 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது - 18 வயதான ஒரே மகள் இறந்ததால் மாற்று சிகிச்சை மூலம் குழந்தை பெற்றார்


குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்துகொண்ட 43 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது - 18 வயதான ஒரே மகள் இறந்ததால் மாற்று சிகிச்சை மூலம் குழந்தை பெற்றார்
x
தினத்தந்தி 26 Nov 2020 4:15 AM IST (Updated: 26 Nov 2020 12:25 AM IST)
t-max-icont-min-icon

18 வயதான மகள் இறந்த நிலையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் 43 வயதில் மீண்டும் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

உப்பள்ளி, 

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா ஷம்சி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா காவேரி (வயது 50). இவரது மனைவி ஷோபா காவேரி (43). இந்த தம்பதிக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதைதொடர்ந்து ஷோபா கர்ப்பமானார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதைதொடர்ந்து ஷோபா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஒரே ஒரு குழந்தை என்பதால் மகளை அவர்கள் சீராட்டி, பாராட்டி வளர்த்து வந்தனர். இந்த தம்பதியின் 18 வயது நிரம்பிய மகள் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால் சந்திரப்பா- ஷோபா தம்பதி மனம் உடைந்தனர். தாங்கள் பெற்ற ஒரு மகளும் இறந்துவிட்டாளே என வேதனையில் இருந்தனர். பின்னர் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள இருவரும் விரும்பினர். ஆனால் ஷோபா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருந்ததால், அதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் உப்பள்ளி சிட்டிகுப்பி அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி டாக்டர் ஸ்ரீதர் தண்டடேயப்பன்னவரிடம் ஆலோசனை கேட்டனர். அதையடுத்து ஷோபாவுக்கு குழந்தை பிறப்பதற்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைதொடர்ந்து கடந்த 10 மாதங்களுக்கு பிறகு ஷோபா மீண்டும் கர்ப்பம் ஆனார். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷோபா பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சிட்டிகுப்பி அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததால் ஷோபாவும், சந்திரப்பாவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு மீண்டும் குழந்தை பிறக்க சிகிச்சை அளித்த டாக்டர், செவிலியர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். குடும்ப கட்டுப்பாடு செய்த 43 வயது பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Next Story