புயல் மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் தயார் - கவர்னர் கிரண்பெடி தகவல்


புயல் மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் தயார் - கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 26 Nov 2020 4:45 AM IST (Updated: 26 Nov 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

புயலால் ஏற்படும் சேதங்களை சமாளிப்பதற்கான மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

காலாப்பட்டு, 

நிவர் புயல் அதி தீவிரமாக மாறி இருப்பதையொட்டி புதுவை அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையொட்டி நேற்று காலை கடலோர பகுதியான கனகசெட்டிகுளம், வைத்திக்குப்பம் கடற்கரைக்கு சென்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார்.

அங்குள்ள மீனவ மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவா, மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பெடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் மையத்திற்கு சென்றார். அங்கிருந்த அதிகாரிகளிடம் புதுவையில் நிவர் புயலை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறை மற்றும் வருவாய் துறையினரின் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இது குறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘புதுவையில் புயல் மீட்பு பணிக்கு கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் சென்னை விமானப்படை மையத்தில் தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். நகர் முழுவதும் கடைகள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்வது நல்ல பலனை தரும்’ என்று கூறியுள்ளார்.


Next Story