சிறையில் கைதிகளுக்கு சலுகையா ? நெல்லையில் டி.ஐ.ஜி. பழனி பதில்
சிறையில் கைதிகளுக்கு சலுகை வழங்கப்படுகிறதா? என்பதற்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி பதில் அளித்தார்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. பேரணியை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் 60-க்கும் மேற்பட்ட சிறைக்காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை சிறைச்சாலை தோட்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூலிகை பண்ணை செடிகளையும், அங்கு நட உள்ள 300 மரக்கன்றுகளை நடும் பணியையும் டி.ஐ.ஜி. பழனி தொடங்கி வைத்தார். மேலும் தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகிய பணிகளையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் டி.ஐ.ஜி. பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் மூலம் மூலிகை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை பண்ணை மூலம் கிடைக்க பெறும் பொருட்கள் சிறை அங்கன்வாடி மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் 5 கைதிகளுக்கு மட்டுமே தொற்று இருந்தது. தற்போது எந்த கைதிக்கும் கொரோனா இல்லை. அனைத்து கைதிகளுக்கும் முககவசம் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய சிறைச்சாலைகளில் கைதிகள் மூலம் 1 லட்சம் முககவசங்கள் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
மத்திய சிறையால் அமைக்கப்பட்டு இயங்கி வரும் பெட்ரோல் பங்க் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பெட்ரோல் பங்க் இந்திய அளவில் முதலிடத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மூலிகை தோட்டம், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பணிகளில் 100 கைதிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் கிளை சிறையில் ஒரு கைதிக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள எந்த கைதிகளுக்கும் எந்தவித சலுகைகளும் வழங்கப்படமாட்டாது. விதிமுறைகளை மீறி யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கைதிகளின் குடும்பத்தினர் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசும் நடைமுறையும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கைதிகள் யாரும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கைதிகளுக்கு சலுகை காட்டும் காவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story