நெல்லை அருகே போலீசார் முன் பெண் தீக்குளித்து சாவு: நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் - கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
நெல்லை அருகே போலீசார் முன் பெண் தீக்குளித்து இறந்த சம்பவத்தில் நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி அனைத்து கட்சியினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி சத்யாநகரைச் சேர்ந்தவர் சகுந்தலா (வயது 45). இவரது மூத்த மகன் பிரசாந்த் (22), இளைய மகன் பிரதீப் (20).
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றது தொடர்பாக சுத்தமல்லி போலீசார் பிரதீப்பை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் பிரதீப் வீட்டில் இருந்தது.
அதை நேற்று முன்தினம் போலீசார் மீட்டனர். அத்துடன் அங்கிருந்த பிரதீப் அண்ணன் பிரசாந்தையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது தாயார் சகுந்தலா எதிர்ப்பு தெரிவித்து, போலீசார் முன்பு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து சகுந்தலாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சிந்துப்பூந்துறையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், த.மு.மு.க. மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், செயலாளர் அலிப் பிலால், சி.பி.ஐ.எம்.எல். மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன், ரமேஷ் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். சகுந்தலாவின் சாவுக்கு நீதி வேண்டும் என்று கூறி அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது.
சுத்தமல்லியை சேர்ந்த சகுந்தலா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். நேற்று முன்தினம் சகுந்தலா வீட்டிற்கு வந்த சுத்தமல்லி போலீசார், அவரது 2-வது மகன் பிரதீப்பை திருட்டு வழக்கு தொடர்பாக அடித்து இழுத்துச் சென்று உள்ளனர். பின்னர் மீண்டும் அவரது வீட்டுக்கு வந்த போலீசார், சகுந்தலாவின் மூத்த மகன் பிரசாந்தையும் அடித்து இழுத்து உள்ளார்கள். இதை தட்டிக் கேட்ட சகுந்தலாவையும் போலீசார் தாக்கியுள்ளனர். இதனால் சகுந்தலா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை காப்பாற்ற சென்ற பிரசாந்த், சகுந்தலாவின் தம்பி பாலா ஆகியோரையும் போலீசார் மிரட்டி தடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் சகுந்தலா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி போலீசார், அவரது மகனிடமும், சகோதரரிடமும் மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளனர். சகுந்தலாவின் சாவுக்கு சுத்தமல்லி போலீசார் தான் முழு காரணம். இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும். இந்த சம்பவம் குறித்து பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த வேண்டும். சகுந்தலாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
விசாரணைக்காக பிரசாந்த்தை போலீசார் அழைத்து சென்றதாகவும், சகுந்தலா தீக்குளித்தபோது போலீசார் தடுக்காமல் இருந்ததாகவும், காப்பாற்ற முயன்ற உறவினர்களை தடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரிக்க நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரை விசாரணை அதிகாரியாக நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் நேற்று சுத்தமல்லி சத்யாநகருக்கு சென்றார். அங்கு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் சகுந்தலா வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டார்.
சகுந்தலாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வற்காக பிரதீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இறுதி சடங்குகள் முடிந்த பின்னர் சகுந்தலாவின் உறவினர்களிடம் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story