டெல்டாவில், கடைகள் அடைப்பு வெறிச்சோடிய சாலைகள் - ஊரடங்கை நினைவூட்டிய ‘நிவர்’ புயல்
நிவர் புயலால் டெல்டாவில் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடின. இவை ஊரடங்கை மீண்டும் நினைவுபடுத்துவது போல் அமைந்தன.
தஞ்சாவூர்,
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது விட்டு விட்டு இந்த மழை பெய்து வருகிறது. தஞ்சை மாநகரில் நேற்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. கொட்டி தீர்க்கும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. மழை காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் நடந்து செல்லும்போது குடைகளை பிடித்தபடியே சென்றனர்.
இருசக்கர வாகனங்களில் வெளியே வந்தவர்கள் மழை கோட்டு அணிந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் சென்றனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பலர் சைக்கிள்களிலும் மழை கோட்டு அணிந்தபடி வெளியே வந்து சென்றனர். பிற்பகலுக்கு பிறகு மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டன.
தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையின் காரணமாக நேற்று பகலிலும் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. தஞ்சை காந்திஜி சாலை, பர்மா பஜார், தெற்கு வீதி, தெற்கு அலங்கம், மருத்துவக்கல்லூரி சாலை, புதுக்கோட்டை சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், செல்போன் கடைகள் என பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்பட்டன.
தஞ்சை கீழவாசல் பகுதியில் சாலையோர காய்கறி கடைகள் எல்லாம் திறந்து இருந்தாலும் விற்பனை பாதிக்கப்பட்டது. மண்பானைகள், அகல் விளக்குகள் விற்பனை செய்பவர்கள் தார்ப்பாய், பாலிதீன் பைகளை கொண்டு மண்பாண்ட பொருட்கள் நனைந்து விடாமல் பாதுகாத்தனர். தார்ப்பாய் விற்பனை அதிகமாக நடைபெற்றது. ஓட்டுவீடு, குடிசை வீடுகளில் மழைநீர் ஒழுகாமல் இருப்பதற்காக பலர், தார்ப்பாய்களை வாங்கி சென்றனர்.
தஞ்சை ரெயிலடி, கீழவாசல் பகுதிகளில் பூக்கடைகள் திறந்து இருந்தன. இன்றும், நாளையும் முகூர்த்த நாளாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு பூக்கள் விற்பனை நடைபெறவில்லை. ஓட்டல்கள் திறந்து இருந்தாலும் மக்கள் அதிக அளவில் வராததால் விற்பனை பாதிக்கப்பட்டது. சில ஓட்டல்கள் பிற்பகலுக்கு பிறகு அடைக்கப்பட்டன.
தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் காய்கறிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் தட்டுப்பாடு நிலவியது. ஒரே நாளில் 50 முதல் 70 டன் காய்கறிகள் விற்றன. நேற்று வழக்கம்போல் மார்க்கெட் திறந்து இருந்தது. காய்கறிகளும் அதிக அளவில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் அதிக அளவில் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
மருந்துக்கடைகள் எல்லாம் வழக்கம்போல் திறந்து இருந்தன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், மழையின் காரணமாகவும் தஞ்சைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. தஞ்சை பெரியகோவிலுக்கு மிக குறைந்த அளவே பக்தர்கள் வந்தனர். அவர்களும் குடைகளை பிடித்தபடியும், மழை கோட்டு அணிந்து கொண்டும் கோவிலுக்குள் சென்றனர்.
இதேபோல் திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா பிரச்சினையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தற்போது தான் மக்கள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது நிவர் புயல் அந்த கோதாவில் குதித்திருக்கிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கை நிவர் புயல் நினைவூட்டி இருக்கிறது. மாவட்டங்களில் காணுகிற காட்சிகளும் அதையே நினைவூட்டின.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்(மி.மீட்டரில்) வருமாறு:-
அணைக்கரை-24, அய்யம்பேட்டை-21, பாபநாசம்-20, கும்பகோணம்-18, திருவிடைமருதூர்-16, மஞ்சளாறு-16, நெய்வாசல் தென்பாதி-14, தஞ்சை-14, வெட்டிக்காடு-10, ஒரத்தநாடு-9, பட்டுக்கோட்டை-8, திருவையாறு-8, திருக்காட்டுப்பள்ளி-8, மதுக்கூர்-6, வல்லம்-6, அதிராம்பட்டினம்-5, குருங்குளம்-4, பூதலூர்-4.
Related Tags :
Next Story