புயல் பாதிப்பை எதிர்கொள்ள எல்லையோர கிராமங்களில் தயார் நிலையில் பேரிடர் தடுப்பு குழுவினர் - கலெக்டர் கார்த்திகா தகவல்


புயல் பாதிப்பை எதிர்கொள்ள எல்லையோர கிராமங்களில் தயார் நிலையில் பேரிடர் தடுப்பு குழுவினர் - கலெக்டர் கார்த்திகா தகவல்
x
தினத்தந்தி 26 Nov 2020 3:45 AM IST (Updated: 26 Nov 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் புயல் பாதிப்பை எதிர்கொள்ள எல்லையோர கிராமங்களில் பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்று கலெக்டர் கார்த்திகா கூறினார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி,

தமிழகத்தில் நிவர் புயல் கடக்கும் பாதையில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்ட எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங் உள்ளிட்ட 6 வருவாய் கிராமங்களில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற 20 போலீசார் கொண்ட பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

அரூர் உதவி கலெக்டர் தலைமையில் மேற்கண்ட கிராமங்களில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்பட அனைத்து துறைகளின் பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். புயல் மழையால் அந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பான முறையில் தங்க வைக்க அரசு பள்ளிகள், சமுதாய கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுகாதார பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புயல் மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் அரசு பள்ளிகள், சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவை தயார் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிட்லிங் பகுதியில் தீயணைப்பு படையை சேர்ந்த குழுவினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனுக்குடன் வழங்க அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிவர் புயல் தொடர்பான தகவல்களை தெரிவிக்க தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புயல் பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் கார்த்திகா கூறினார்.

Next Story