புயல் பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் ஆய்வு - தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு
அரக்கோணம் மற்றும் பனப்பாக்கம் பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார். அப்போது முகாமில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்க உத்தரவிட்டார்.
அரக்கோணம்,
‘நிவர்’ புயல் காரணமாக அரக்கோணத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரக்கோணம் நகராட்சி சார்பில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர். மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கினர். பிரதான சாலைகள் முழுவதும் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
தண்டலம் கிராமத்தில் வயல்வெளியில் கூடாரம் அமைத்து வசித்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 8 குடும்பங்களை சேர்ந்த 18 தொழிலாளர்கள் அங்குள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிலையத்திலும், சித்தூர் கிராமம் பெரிய ஏரிக்கரையில் வசிக்கும் 7 குடும்பங்களைச் சார்ந்த 22 இருளர் இன மக்கள், மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமிலும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தண்டலம் கிராமத்தில் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கபட்டிருந்தவர்களை ராணிபேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பார்வையிட்டு, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் காவனூர் ஏரியினை பார்வையிட்டார். அப்போது அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
பனப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேருராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், குடிசை பகுதி, வெள்ள அபாயம் உள்ள பகுதி மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் வசிப்பவர்கள் என 131 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவம் ஆகிய அடிப்படை வசதிகளை பனப்பாக்கம் பேருராட்சி நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்து தேவையான அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செய்து கொடுக்கவும், மின்சாரம் தடை ஏற்படும் சமயங்களில் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த தயார் நிலையில் வைத்திருக்குமாறு ஆலோசனை கூறினார்.
சிப்காட்டை அடுத்துள்ள ஏகாம்பரம்நல்லூர் ஏரியை உதவி கலெக்டர் இளம்பகவத் நேரில் ஆய்வு செய்தார். அப்போது புயல் மற்றும் கடும் மழை பெய்தால் ஏரி பாதுகாப்பு குறித்தும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
இதேபோல் ராணிப்பேட்டை நகராட்சியும் புயல் மற்றும் மழை வந்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து ஆட்டோவில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.
திமிரி ஒன்றியத்தில் பரதராமி, கணியனூர், வேம்பி ஆகிய கிராமங்களில் குடிசை மற்றும் கூரை வீடுகளில் வசிப்போர், ஆபத்தான வீடுகளில் வசிப்போர் கண்டறியப்பட்டு, அவர்களை அதிகாரிகள் அழைத்து வந்து, மேற்கண்ட புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்துள்ளனர்.
அந்தப் புயல் பாதுகாப்பு மையங்களில் ராணிப்பேட்டை கூடுதல் கலெக்டர் உமா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்துள்ளவர்களுக்கு அடிப்படை வசதிளகள், மருத்துவ வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். வயது முதிர்ந்தவர்களுக்கு போர்வைகளை வழங்கி உள்ளனர். அதை, கூடுதல் கலெக்டர் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அதிகாரிகள் கூறுகையில், புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கி உள்ள அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், எனக் கொண்டனர். ஆய்வின்போது திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ மற்றும் பொறியாளர், ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story