‘நிவர்’ புயல் கரையை கடந்த போது வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் பலத்த மழை - நிவாரண முகாம்களில் 164 பேர் தங்க வைப்பு
வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் கரையை கடக்கும்போது நள்ளிரவில் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வசித்த 164 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் முன்னேற்பாடுகள் மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. குடிசை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகேயுள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லும்படியும், ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகே செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மழை, வெள்ள பாதிப்பு மற்றும் அவசர தேவைகளுக்காக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயக்கும் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறையினர், மின்ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பினர், மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், காவல், தீயணைப்புத்துறையினர் மழை, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய மரம் அறுக்கும் எந்திரங்கள், மணல் மூட்டைகள், மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் இருக்கும்படி கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை 6 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னல் இல்லாமல் காற்று வீசாமல் மிதமான மழை பெய்தது. காலையில் தொடங்கிய மழை விட்டு, விட்டு இரவு 10 மணி வரை சாரல் மழையாகவும், மிதமான மழையாகவும் பெய்தது. மழை காரணமாக சாலையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. நேற்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டதால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கினர். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் வேலூர் மாவட்டத்தில் பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டன. அதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மாவட்டம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசைகளில் வசித்த 164 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நிவர் புயல் கரையை கடக்கும் போது நேற்றிரவு 10.30 மணி அளவில் கனமழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை நள்ளிரவை தாண்டி மாவட்டம் முழுவதும் கொட்டித்தீர்த்தது. பகல் முழுவதும் சாதுவாக இருந்த மழை நள்ளிரவில் பேய் மழையாக பொழிந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வப்போது விட்டு விட்டு மின்தடையும் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சத்துடன் வீட்டின் தூங்காமல் தவித்தனர். ‘நிவர்’ தொடர்பான செய்திகளை தங்களது செல்போன் மற்றும் டி.வி.க்களில் பார்த்தனர்.
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டின் கீழ் பேரணாம்பட்டு, குடியாத்தம், அணைக்கட்டு, வேலூர், கே.வி.குப்பம், காட்பாடி, கணியம்பாடி ஆகிய ஒன்றியங்களில் 134 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் 11 ஏரிகள் 25 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது. மேலும் 20 ஏரிகள் 50 சதவீதமும், 2 ஏரிகள் 75 சதவீதமும், 1 ஏரி முழுவதும் நிரம்பி உள்ளது.
‘நிவர்’ புயல் மழை காரணமாக ஏரிகளை கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஏரிகளில் பலவீனமாக உள்ள கரைப்பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. திடீரென உடைப்பு ஏற்பட்டாலோ, கரைப்பகுதி உடையும் நிலை இருந்தாலோ அங்கு மணல் மூட்டைகளை வைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக 3,800 மணல் மூட்டைகள் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சி, காட்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடுகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் நேற்று எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story