திருப்பத்தூர் அருகே பிறந்த சில மணி நேரத்தில் ஆண் குழந்தை முட்புதரில் வீச்சு
பிறந்த சில மணி நேரத்தில் முட்புதரில் ஆண் குழந்தை வீசப்பட்டது. காயம் அடைந்த அந்த குழந்தைக்கு தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமின் எதிர் புறத்தில் உள்ள முட்புதரில் இருந்து நேற்று காலையில் பச்சிளம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்களும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் முட்புதருக்குள் சென்று பார்த்தனர். அதில் பிறந்து சில மணி நேரமே ஆன அழகான ஆண் குழந்தை முட்கள் கீறப்பட்ட காயங்களுடன் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும், கண்டவராயன்பட்டி போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், இது தொடர்பாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
குழந்தையை முட்புதரில் வீசிச் சென்றது யார், எதற்காக குழந்தையை வீசினர், குழந்தையின் தாய் எங்கே? என்பது குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story