மாவட்டத்தில் ரூ.105 கோடியில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்


மாவட்டத்தில் ரூ.105 கோடியில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2020 10:00 PM GMT (Updated: 26 Nov 2020 4:23 AM GMT)

மதுரையில் ரூ.105 கோடியில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை,

மதுரை பரவை கண்மாய், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது. அதனை கலெக்டர் அன்பழகன் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை பரவை பேரூராட்சியில் இருக்கும் பரவை கண்மாயின் முழு கொள்ளளவு 175.57 மில்லியன் கனஅடி. இதன் பாசன பரப்பு 366 ஏக்கர் ஆகும். தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் பரவை கண்மாயில் சுமார் 850 மீட்டர் நீளமுள்ள கரையை புனரமைக்கும் பணி, கண்மாயின் உட்புறத்தில் முட்புதர்களை அகற்றும் பணி, வரத்துவாய்க்கால் பணி மற்றும் மறுகால் வாய்க்கால் பணிகள் ஆகியவை ரூ.90 லட்சம் செலவில் நடந்து முடிந்து உள்ளது. அதில் 15 சதவீதம் அளவுக்கு முட்புதர்கள் அகற்றும் பணி உள்ளது.

இந்த குடிமராமத்து பணி காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு கண்மாயில் முழு கொள்ளளவு தண்ணீர் நிறைந்துள்ளது. அதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்து உள்ளது. இந்த கண்மாய் போல் மதுரையில் ரூ.105 கோடி மதிப்பில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் நிலைகள் உயர்ந்துள்ளது.

மழை காலத்தில் நீர் வீணாகாமல் மழைநீர் சேமிக்கப்படுகிறது. இந்த குடிமராமத்து பணியை சிறப்பாக செய்வதற்கு உத்தரவிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-ம் கரிகால சோழனாக பார்க்கப்படுகிறார். இந்த குடிமராமத்து பணிகள் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் நடக்கிறது. அந்தந்த கிராம சங்கங்கள் மூலம் பணிகள் நடந்து உள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.1400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கொடிமங்கலம் அருகில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. அதன் மூலம் கொடிமங்கலம், துவரிமான், மாடக்குளம், கருமாத்தூர் ஆகிய கண்மாய்களில் தண்ணீர் நிறைந்துவிடும். மாடக்குளம் கண்மாய் நிரம்புவதால் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடும். ஏற்கனவே ரூ.85 லட்சம் செலவில் மாடக்குளம் கண்மாய் தூர்வாரப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசால் 12 மாவட்டங்கள் புயலால் பாதிக்கும் என அறிவிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் பொதுமக்களுக்காக ரேஷன் பொருட்கள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் 1000 ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் தேவைப்பட்டால் 1,200 ரேஷன் கார்டுகளுக்கு உள்ள பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் மழைநீர் சூழ்ந்தால் கடைகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சருடன் பரவை பேரூராட்சி முன்னாள் தலைவர் சி.ராஜா, முன்னாள் துணை மேயர் திரவியம், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி மற்றும் பணியாளர்கள், வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story