கொட்டும் மழைக்கு மத்தியில் மக்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் - உணவு பொருட்களை வழங்கினார்
கொட்டும் மழைக்கு மத்தியில் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
நிவர் புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழையும், புயல் காற்றும் வீசி வருகிறது. தொடர்ந்து கொட்டி வரும் மழையால் சென்னை மிதக்கிறது.
இந்தநிலையில், மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று கொட்டும் மழைக்கு மத்தியில், மழைநீரில் நடந்து சென்று, மக்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு உணவு பொருட்கள் உள்ளிட்ட நல உதவிகளையும் வழங்கினார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:-
நிவர் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மக்களின் வாழ்விடங்கள் நீரால் சூழ்ந்துள்ளன. சென்னை மாநகரைப் பொறுத்தவரை தாழ்வான மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. கடலோர மாவட்ட மக்களின் நிலையும் இதுதான்.
சென்னையில், திரு.வி.க. நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகள் உட்பட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கினேன். செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு காரணமாக, அதனைத் திறந்துவிடப் பொதுப்பணித்துறை முடிவெடுத்து திறந்து விட்டிருப்பதால், அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை 2015-ம் ஆண்டு வெள்ளப் பேரிடர் போன்ற சூழல் மிரட்டி வருகிறது. மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைககளில் அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.
எப்போதும் மக்கள் பணியாற்றும் பேரியக்கமான தி.மு.க. நிர்வாகிகள், மக்களுக்குத் தேவையான உதவிகளையும் பேரிடர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்போது முதலில் நமக்குத் தேவை மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது என்பதை மனதில் கொண்டு தீவிரப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
ஏறத்தாழ 9 மாதங்களாக கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தப் புயல் மழைச்சூழல் அந்த நோய்த் தொற்றின் இரண்டாம் அலைக்குக் காரணமாகி விடக்கூடாது. தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் உரிய மருத்துவ முறைகளை கையாண்டு, மக்களை காத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story