நிவர் புயல் எதிரொலி: வெள்ளத்தில் மிதந்த வரதராஜபுரம்- படகுகள் மூலம் மீட்கப்பட்ட குடியிருப்புவாசிகள்


நிவர் புயல் எதிரொலி: வெள்ளத்தில் மிதந்த வரதராஜபுரம்- படகுகள் மூலம் மீட்கப்பட்ட குடியிருப்புவாசிகள்
x
தினத்தந்தி 27 Nov 2020 4:00 AM IST (Updated: 27 Nov 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

நிவர் புயலால் ஏற்பட்ட மழை காரணமாக சென்னையை அடுத்த முடிச்சூர் அருகே வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

சென்னை,

நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று புயல் கரையை கடந்த பிறகு மழையின் தாக்கம் வெகுவாக குறைந்தது. நேற்று அவ்வப்போது லேசான அளவில் மட்டுமே மழை பெய்து வந்தது. எனினும், 2 நாட்கள் பெய்த மழையால் சென்னையை அடுத்த முடிச்சூர் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனால், முடிச்சூர் அருகே உள்ள வரதராஜபுரம், அமுதம் நகர், அஷ்டலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், ராயப்பா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மழை வெள்ளத்தில் தீவு போல் காட்சி அளித்தன.

இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சுமார் 4 முதல் 5 அடிகள் வரை வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தது. இதன் காரணமாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் சிரமப்பட்டனர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் தரைத்தளத்தில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், அந்த வீடுகளில் உள்ள பிரிட்ஜ், வாஷிங்மிஷின், கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சிலர் இதுபோன்ற வீட்டு உபயோக பொருட்களை முதல் தளங்களில் உள்ள தங்கள் நண்பர்கள் வீடுகளில் எடுத்து பாதுகாத்து கொண்டனர்.

தரைத்தளத்தில் தண்ணீரில் சிக்கிய நபர்கள் பெரும்பாலானவர்கள் முதல் தளத்தில் உள்ள தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். சிலர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தண்ணீர் புகுந்த வீட்டில் தூக்கத்தை இழந்து தவித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை முதல் தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் ஜாபர் சேட் தலைமையில், இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் இந்த பகுதியில் தண்ணீரில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகளுடன் குடியிருப்பு பகுதிக்குள் சென்று ஒலிப்பெருக்கி மூலம், ‘வெள்ளத்தில் சிக்கி அவதிப்படுபவர்கள் ரப்பர் படகை பயன்படுத்தி முகாம்களுக்கு செல்லலாம்’ என்று அழைப்பு விடுத்தனர். ஆனால், பெரும்பாலானவர்கள் வீடுகளில் அமர்ந்து கொண்டனர். தரைத்தளத்தில் தங்கியவர்களில் சிலர் மட்டுமே அழைப்பை ஏற்று ரப்பர் படகுகள் மூலம் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். அமுதம் நகர் பகுதியில் தீயணைப்புத்துறை இயக்குனர் ஜாபர் சேட் தலைமையில் தீயணைப்புப் படையினரால் 48 பேர் மீட்கப்பட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, சோமமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கனகராஜ் தலைமையில் பெண் போலீசார் உள்பட போலீசார் ராயப்பன் நகர் பகுதியில் நாட்டு படகு மூலம் வீடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதற்காக கானத்தூர், ரெட்டிக்குப்பம் பகுதியில் இருந்து நாட்டுப் படகுகள் கொண்டு வரப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு போலீசார், தீயணைப்பு படையினர், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் என பல்வேறு துறையினரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த பகுதிகளில் மீட்கப்பட்டவர்கள் மகாலட்சுமி நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, பெருங்களத்தூர் பெரியார் நகர், அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் மீட்கப்பட்ட சுமார் 300 குடும்பத்தினர் பெருங்களத்தூர் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும், கிழக்குத் தாம்பரம் இரும்புலியூர் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ். சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story