166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலின் 12-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - நினைவிடத்தில் கவர்னர், முதல்-மந்திரி அஞ்சலி


166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலின் 12-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - நினைவிடத்தில் கவர்னர், முதல்-மந்திரி அஞ்சலி
x
தினத்தந்தி 27 Nov 2020 5:00 AM IST (Updated: 27 Nov 2020 9:00 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 166 பேர் கொல்லப்பட்ட 12-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவிடத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அஞ்சலி செலுத்தினர்.

மும்பை,

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலை யாரும் மறந்து விட முடியாது. அதிபயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தானில் இருந்து அரபிக்கடல் வழியாக படகில் பயணம் செய்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் மும்பைக்குள் நுழைந்து சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், தாஜ் ஓட்டல், காமா ஆஸ்பத்திரி, நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களில் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடிக்க செய்தும் கொடூர தாக்குதலை நடத்தி தங்களது கோர முகத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்ச்சியாக 60 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 18 பேர் உள்பட 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் வெளிநாட்டினரும் அடங்குவர். சுமார் 320 பேர் காயம் அடைந்தனர். இதனால் இந்த அதிபயங்கர தாக்குதல் உலகையே உலுக்கியது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகளை துப்பாக்கி சண்டையில் நமது பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி தூக்கிலிடப்பட்டான்.

ஓயாத துயரத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதலின் 12-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மும்பையில் கடற்கரை சாலை திட்டம் நிறைவேற்றப்படுவதால், மெரின்லைன் போலீஸ் ஜிம்கானாவில் இருந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோர் நினைவிடம் தென்மும்பையில் உள்ள போலீஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு புதிதாக கட்டப்பட்டது.

இந்த நினைவிடத்தில் நேற்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், சுற்றுச்சூழல் மந்திரி ஆதித்ய தாக்கரே ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் அரங்கை, தாக்குதலில் பலியானவர்கள் சிலரின் மனைவிகள் திறந்து வைத்தனர்.

முன்னதாக அஞ்சலி செலுத்திய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறுகையில், “மாநில அரசு நிதி நெருக்கடி சமயத்திலும் போலீஸ் படையை வலுப்படுத்தி வருகிறது. பயங்கரவாதிகள் மராட்டியம், மும்பையை தாக்க துணியக்கூடாது. அந்த அளவுக்கு நமது சக்தியை அதிகரிக்க வேண்டும். எந்த ஒரு பயங்கரவாதியும் தாக்குவதற்கு முன்வந்தால், அவன் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட வேண்டும்“ என்றார்.

மராட்டிய போலீஸ் துறை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எஞ்சியவர்களை பாதுகாக்க தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி‘ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பாதுகாப்பு படையினரின் தியாகத்தை அந்த நேரத்தின் நினைவுகள் மற்றும் வரலாற்றில் இருந்து ஒருபோதும் அழித்து விட முடியாது என்று மும்பை போலீசார் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளனர்.

மும்பை தாக்குதல் நினைவு தினத்தையொட்டி மும்பையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மும்பை தாக்குதல் நினைவு நாளில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பேர் கடந்த 19-ந்தே

Next Story