பணமோசடி வழக்கு: சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக்கிற்கு நெருக்கமானவர் கைது - அமலாக்கத்துறையினர் நடவடிக்கை
பண மோசடி வழக்கில் சிவசேனா எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமானவரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
மும்பை,
டாப்ஸ் குரூப் எனும் பாதுகாப்பு நிறுவனம் மராட்டிய அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சேவை வழங்கி வருகிறது. குறைந்த அளவில் பாதுகாவலர்களை அனுப்பி போலியாக கணக்கு காட்டி அதிக தொகையை பெற்றதாக புகார் எழுந்தது. இந்த நிறுவனத்தின் நிறுவனரான ராகுல் நந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டவிரோத பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் தானேயில் உள்ள ஒவலா மஜிவாடா தொகுதியை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக், கடந்த 2014-15-ம் ஆண்டில் டாப்ஸ் குரூப் நிறுவனம் பாதுகாப்பு ஒப்பந்தம் பெற உதவியதாக அமலாக்கத்துறை சமீபத்தில் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 24-ந் தேதி எம்.எல்.ஏ.வின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பிரதாப் சர்நாயக் பெயரில் ஒரு வெளிநாட்டு வங்கி வழங்கிய டெபிட் கார்டை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் அதன் முகவரி ஒரு பாகிஸ்தானியருக்கு உரியதாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக்கிற்கு நெருக்கமான அமித் சந்தோலை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். டாப்ஸ் குரூப் நிறுவன உரிமையாளர் ராகுல் நந்தா, எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக் இடையேயான பண பரிவர்த்தனை குறித்த தகவல்களை பெற இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வழக்கில் சிவசேனா எம்.எல்.ஏ. சர்நாயக்கும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தெரிகிறது.
இதற்கிடையே கைதான அமித் சந்தோலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 29-ந் தேதி வரை அமலாக்துறையினர் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.
Related Tags :
Next Story