அதிக மின் கட்டணத்தை செலுத்தாதீர்கள் - ராஜ் தாக்கரே சொல்கிறார்


அதிக மின் கட்டணத்தை செலுத்தாதீர்கள் - ராஜ் தாக்கரே சொல்கிறார்
x
தினத்தந்தி 27 Nov 2020 3:30 AM IST (Updated: 27 Nov 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

மின்நிறுவனங்களால் விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்களை பொதுமக்கள் செலுத்தவேண்டாம் என நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் அதிக மின்கட்டணம் விதிக்கப்பட்டதற்கு சினிமா, விளையாட்டு, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களும் சமூகவலைதளங்களில் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்தநிலையில் பொதுமக்களிடம் அதிக மின் கட்டணம் வசூலிக்க கூடாது எனவும், ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் பா.ஜனதா போராட்டம் நடத்தியது.

இந்தநிலையில் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவும் மக்கள் யாரும் அதிகப்படியான மின் கட்டணத்தை செலுத்தவேண்டாம் என தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட நஷ்டத்தை காரணம் காட்டி விதிக்கப்படும் அதிகப்படியான மின் கட்டணத்தை மக்கள் யாரும் செலுத்தவேண்டாம் என நான் கோரிக்கை வைக்கிறேன்.

இதற்காக எந்த மின் நிறுவனத்தின் அதிகாரிகளாவது மின் இணைப்பை துண்டித்தால், அந்த நிறுவனம் வலுவான எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்குவது குறித்து மின்சாரத்துறை மந்திரியை நவநிர்மாண் சேனா கட்சியின் குழு அணுகியது. ஆனால் அவரிடம் இருந்து உறுதியான பதில் ஏதும் கிடைக்கவில்லை. அதேபோல கவர்னரையும் சந்தித்து முறையிட்டோம். அவர் மாநில அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறிதும் ஆர்வம் செலுத்தவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மாநில அரசு சற்று பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். மின் கட்டண சலுகையை அறிவிக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நவநிர்மாண் சேனா கட்சியினர் 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று தானேயில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினர். அவர்கள் அதிகப்படியாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

இருப்பினும் கொரோனா தடைகாலத்தில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்த முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story