கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட உணவு, தண்ணீர் சாப்பிடாமல் மரத்தில் அமர்ந்து மடாதிபதி தியானம் - 9 நாள் தவத்தை இன்று நிறைவு செய்கிறார்


கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட உணவு, தண்ணீர் சாப்பிடாமல் மரத்தில் அமர்ந்து மடாதிபதி தியானம் - 9 நாள் தவத்தை இன்று நிறைவு செய்கிறார்
x
தினத்தந்தி 27 Nov 2020 3:30 AM IST (Updated: 27 Nov 2020 9:47 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் மரத்தில் அமர்ந்து மடாதிபதி ஒருவர் தியானம் செய்து வருகிறார். அவரது 9 நாள் தவம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது.

கலபுரகி,

சீனாவின் உகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு (2019) நவம்பர் மாதம் உற்பத்தி ஆன கொரோனா வைரஸ் ஒரு ஆண்டாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்தியாவில் 92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த வைரஸ் உற்பத்தியாகி ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் அதை கட்டுப்படுத்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவில்ல. இந்த நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு சாமியார், கொரோனா வைரஸ் ஒழிய வேண்டி மரத்தில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

பீதர் மாவட்டம் பாவகி கிராமத்தில் கவிசித்தா மடம் உள்ளது. இங்கு மடாதிபதியாக இருப்பவர் மகாதேவ சுவாமி. 70 வயதான இவர் தான் கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா மொகலா என்ற கிராமத்தில் உள்ள கோவில் முன்புள்ள வேப்பமரத்தின் கிளையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார்.

இவர் இந்த தியானத்தை கடந்த 8 நாட்களுக்கு முன்பு தொடங்கினார். தியானம் மேற்கொண்டுள்ள மடாதிபதி, உணவு, தண்ணீர் உண்ணாமல் இரவு- பகலாக மரத்தில் தியானம் செய்து வருகிறார். அத்துடன் அவர் இயற்கை உபாதை கழிக்காமல் கடும் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த தியானத்தை இன்றுடன் (வெள்ளிக்கிழமை) மடாதிபதி மகாதேவ சுவாமி முடித்துக்கொள்கிறார். அவரிடம் ஆசிவாங்குவதற்காக கடந்த 8 நாட்களாக பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து மடாதிபதி மகாதேவ சுவாமி கூறுகையில், கொரோனா வைரஸ் ஒழியவும், அந்த வைரசின் பிடியில் இருந்து உலகமும், உலக மக்களும் விடுபட்டு நலமுடன் வாழ 9 நாள் உணவு, தண்ணீர் உண்ணாமல் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

Next Story