நின்ற கார் மீது மோதியதுடன் கன்டெய்னர் லாரி கடைக்குள் புகுந்தது; வக்கீல் உள்பட 4 பேர் பலி - சிக்பள்ளாப்பூர் அருகே கோர விபத்து


நின்ற கார் மீது மோதியதுடன் கன்டெய்னர் லாரி கடைக்குள் புகுந்தது; வக்கீல் உள்பட 4 பேர் பலி - சிக்பள்ளாப்பூர் அருகே கோர விபத்து
x
தினத்தந்தி 27 Nov 2020 3:30 AM IST (Updated: 27 Nov 2020 9:56 AM IST)
t-max-icont-min-icon

சிக்பள்ளாப்பூர் அருகே நின்ற கார் மீது மோதியதுடன் கன்டெய்னர் லாரி கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் வக்கீல் உள்பட 4 பேர் பலியானார்கள்.

சிக்பள்ளாப்பூர்,

சிக்பள்ளர்பூர் மாவட்டம் சிட்லபுரா கிராசில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை ஒரு கடையின் அருகில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு கன்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையோரம் நின்றிருந்த காரின் மீது பயங்கரமாக மோதியது. மேலும் காரை இடித்து தள்ளிக்கொண்டு அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது. இதில் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் ஒருவர் மீட்கப்பட்டவுடன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 3 பேரையும் அந்தப் பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சிக்பள்ளாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் 3 பேரும் சிகிச்சை பலன் அளிக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நந்திகிரிதாம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான 4 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் சிக்பள்ளாப்பூரை சேர்ந்த வக்கீல் யமுனாச்சாரி, வெங்கடேஷ், பெங்களூருவை சேர்ந்த களஞ்சியம், நிதேஷ் கவுடா ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக நந்திகிரிதாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக விபத்து நடந்ததும் கன்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நின்றிருந்த கார் மீது மோதிவிட்டு கன்டெய்னர் லாரி கடைக்குள் புகுந்த விபத்தில் வக்கீல் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story