நிவர் புயலால் மரக்காணத்தில் பலத்த மழை: ஆற்றில் வெள்ளம்; தரைப்பாலம் மூழ்கியதால் கிராமம் துண்டிப்பு - கடற்கரையில் மண் அரிப்பு- மரங்கள் வேரோடு சாய்ந்தன


நிவர் புயலால் மரக்காணத்தில் பலத்த மழை: ஆற்றில் வெள்ளம்; தரைப்பாலம் மூழ்கியதால் கிராமம் துண்டிப்பு - கடற்கரையில் மண் அரிப்பு- மரங்கள் வேரோடு சாய்ந்தன
x
தினத்தந்தி 27 Nov 2020 5:00 AM GMT (Updated: 27 Nov 2020 4:36 AM GMT)

நிவர் புயலால் மரக்காணத்தில் பலத்த மழை பெய்ததையொட்டி ஓங்கூர் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது. தரைப்பாலம் மூழ்கியதால் கிராமம் துண்டிக்கப்பட்டது. கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மரக்காணம்,

புதுச்சேரி-மரக்காணம் இடையே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நிவர் புயல் கரையை கடக்க தொடங்கியது. இதனால் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. விடிய விடிய பெய்த இந்த மழையால் மரக்காணம் பகுதியில் பல இடங்களில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. புயல் காற்றால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அலைகள் கடற்கரையில் இருந்த மணலை வாரிச் சுருட்டிக்கொண்டு சென்றன. காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கடற்கரையோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன.

கடற்கரை கிராமங்களான அழகன்குப்பம், கைப்பாணிக்குப்பம், தாழங்காடு குப்பம், எக்கியார்குப்பம், புதுக்குப்பம், பனிச்சமேடு குப்பம், அனுமந்தை குப்பம், நொச்சிக்குப்பம், கூனிமேடு குப்பம், புத்துப்பட்டு குப்பம், நடுக்குப்பம், முதலியார்சாவடி குப்பம் உள்பட 19 மீனவர் கிராமங்களில் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு அங்கு மண் மேடு இருந்ததற்கான அடையாளமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

புயல் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை மரக்காணம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் திண்டிவனம் அருகே ஓங்கூர் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மண்டகப்பட்டு கிராமத்தில் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் மற்ற பகுதியுடன் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு அந்த கிராமம் துண்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைக்காக அங்கிருந்து வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

இதேபோல் காணிமேடு கிராம மக்களும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி மரக்காணம் பகுதிக்கு செல்ல வேண்டியது இருந்ததால் அவதிக்குள்ளானார்கள்.

சூறைக்காற்றுடன் கூடிய புயல் மழையால் கிழக்கு கடற்கரை சாலையில் தாழங்காடு, மரக்காணம் மேட்டுத்தெரு, மண்டவாய், ஆலப்பாக்கம், ஆச்சிக்காடு, அனுமந்தை, செட்டிக்குப்பம், கீழ்புத்துப்பட்டு, முதலியார்சாவடி, கீழ்பேட்டை ஆகிய பகுதிகளில் மொத்தம் 16 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. சாலையில் விழுந்த மரங்களை போலீஸ் டி.ஐ.ஜி. எழிலரசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் ஆகியோர் தலைமையிலான மீட்பு குழுவினர் பல்வேறு பிரிவாக பிரிந்து எந்திரங்கள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினர்.

மரக்காணம் மேட்டுத்தெரு, செட்டிக்குப்பம், வட அகரம் ஆகிய இடங்களில் காற்றின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தும், மர கிளைகள் முறிந்து விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்தும் மின்சாரம் தடைப்பட்டது. புயல், பலத்த மழை காரணமாக முன்னெச்சரிக்கையாக 24-ந் தேதி நள்ளிரவு முதல் மரக்காணம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

சாய்ந்த மின்கம்பங்கள், அறுந்த மின்கம்பிகளை மின்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சரிசெய்து வருகின்றனர். இந்த பணி முடிந்ததும் படிப்படியாக மின்சாரம் வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மரக்காணம் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழையால் கந்தாடு பகுதியில் சுமார் 50 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சம்புவெளி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் குடிசை வீடு இடிந்து சேதமடைந்தது. வண்டிப்பாளையம் கிராமத்தில் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், அருகில் இருந்த வீடு சேதமடைந்தது.

புயலையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயாசிங், சப்-கலெக்டர் அனு, திட்ட இயக்குனர் மகேந்திரன், தாசில்தார் உஷா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், சிவகாமி மற்றும் பேரிடம் மீட்பு குழுவினர் மரக்காணம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் முகாமிட்டு, மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

Next Story