மினிக்காய் தீவில் இருந்து விடுவிக்கப்பட்ட தருவைகுளம் மீனவர்கள் அரசுக்கு நன்றி தெரிவிப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நிகழ்ச்சி


மினிக்காய் தீவில் இருந்து விடுவிக்கப்பட்ட தருவைகுளம் மீனவர்கள் அரசுக்கு நன்றி தெரிவிப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 Nov 2020 11:30 AM IST (Updated: 27 Nov 2020 11:28 AM IST)
t-max-icont-min-icon

மினிக்காய் தீவில் இருந்து விடுவிக்கப்பட்ட தருவைகுளம் மீனவர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் மினிக்காய் தீவில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தருவைக்குளம் மீனவர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, மினிக்காய் தீவில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மீனவர்கள், தங்களை விரைந்து எவ்வித வழக்கோ, அபராதமோ இன்றி விடுவித்தமைக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தருவைக்குளத்தை சேர்ந்த படகில் மினிக்காய் தீவு தடை செய்யப்பட்ட பகுதியில் சென்றபோது 10 மீனவர்கள் பிடிபட்டனர். இந்த செய்தி உடனடியாக அரசுக்கு தெரிய வந்தது. அரசு, ஆழ்கடல் மீனவர்களுக்கு சேட்டிலைட் போன் கொடுக்கப்பட்ட காரணத்தால்தான் அவர்களால் உடனடியாக தகவல் தெரிவிக்க முடிந்தது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மூலம் மினிக்காய் தீவில் நடந்த நிகழ்வுகள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அவர் எடுத்த நடவடிக்கையால் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். எவ்வித அபராதமோ, வழக்கோ இன்றி மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தருவைக்குளம் பகுதியில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் ரூ.13 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் அமை க்கப்பட்டது. அப்போது இங்கு 67 விசைப்படகுகள்தான் இருந்தது. தற்போது 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், நாட்டு படகுகளும் உள்ளதால் மீன்பிடி இறக்கு தளம் போதுமான அளவில் இல்லாமல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இங்கு ரூ.10 கோடியில் கூடுதலாக மீன்பிடி இறக்குதளம் அமைக்க அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட உள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்படும்.

மீனவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் கொரோனா காலத்தில் நிவாரண தொகையாக ரூ.2, 000 வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரத்து 220 மீனவர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது. தருவைக்குளம் ஆழ்கடல் மீனவர்கள் 130 பேருக்கு 90 சதவீதம் மானியத்தில் ரூ.1.20 கோடி மதிப்பிட்டில் சேட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளது. மீனவ மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் முதல்-அமைச்சராக நமது முதல்-அமைச்சர் விளங்கி வருகிறார். நீங்கள் என்றும் அரசுக்கும், முதல்- அமைச்சருக்கும் ஆதரவாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங் காவலர் குழு தலைவர் மோகன், மீன்வளத்துறை இணை இயக்குநர் தீபா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் முத்து, மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் புஸ்ரா ஷப்னம், வைலா, தருவைக்குளம் பஞ்சாயத்து தலைவர் காடோடி, கூட்டுறவு சங்க தலைவர் லூர்துராஜ், விசைப்படகு சங்க தலைவர் பன்னீர்தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன்பொன்மணி, வளர்மதி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆலோசனைமரியான் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Next Story