பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு திடீர் ஆய்வு - கூலி தொழிலாளியின் குழந்தைகளுக்கு உடனடியாக சாதிச்சான்று வழங்கி நடவடிக்கை


பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு திடீர் ஆய்வு - கூலி தொழிலாளியின் குழந்தைகளுக்கு உடனடியாக சாதிச்சான்று வழங்கி நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Nov 2020 6:15 AM GMT (Updated: 27 Nov 2020 6:17 AM GMT)

பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூலி தொழிலாளியின் குழந்தைகளுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டராக விஷ்ணு பொறுப்பேற்ற பின்னர் அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள வருவாய் துறையின் ஆவணங்களையும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களையும் பார்வையிட்டார். தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த பொதுமக்களிடமும் கலெக்டர் விஷ்ணு குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது மேலப்பாளையம் அருகே கருங்குளம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன் தன்னுடைய குடும்பத்தினருடன் தாலுகா அலுவலகத்தில் இருந்தார். அவரிடம் கலெக்டர் விஷ்ணு குறைகளை கேட்டார்.

அப்போது சரவணன் கூறுகையில், தன்னுடைய குழந்தைகள் மணிகண்டன், அஜய் துரை, பானு அனுஷியா ஆகியோருக்கு பள்ளிக்கூடத்தில் சமர்ப்பிப்பதற்காக சாதி சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். அந்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள் விண்ணப்பத்துடன் எனது கல்வி சான்றிதழை இணைக்கவில்லை என்று கூறி நிராகரித்தனர்.

நான் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை. எனவே எனது குழந்தைகளை எப்படியாவது பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் என்று கருதி படிக்க வைத்துள்ளேன். எனவே அவர்களது கல்வி தடைபடாமல் இருக்க சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து கலெக்டர் விஷ்ணு, சரவணனின் 3 குழந்தைகளுக்கும் உடனே சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து தாலுகா அலுவலக ஊழியர்கள் உடனடியாக சாதி சான்றிதழ் தயார் செய்து, தொழிலாளி சரவணனிடம் வழங்கினர்.

ஆய்வின்போது தாசில்தார் செல்வன் உடன் இருந்தார். சாதி சான்றிதழ் கேட்ட தொழிலாளிக்கு உடனே அதனை வழங்க ஏற்பாடு செய்த கலெக்டரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Next Story