நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2020 12:00 PM IST (Updated: 27 Nov 2020 11:51 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் நெல்லை மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் மூட்டா கல்லூரி பேராசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜ்குமார், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த சுயம்புலிங்கம், மூட்டா சங்கத்தை சேர்ந்த நசீர் அகமது ஆகியோர் தலைமை தாங்கினர். செல்வராஜ், சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் முருகேசன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் தளவாய், மூட்டா சங்கத்தைச் சேர்ந்த கோயில்தாசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

நாடு தழுவிய அளவில் நடந்த பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு ஆசிரியருக்கு இணையாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை 20 20-ஐ திரும்ப பெற வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:10 என மாற்றி அமைக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி வாழ்த்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story