தொழிலாளருக்கு எதிரான சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் - 781 பேர் கைது
தொழிலாளருக்கு எதிரான சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 781 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி,
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், தொழிலாளருக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறையை தனியார் மயமாக்க கூடாது. அனைவருக்கும் ஓய்வூதியம் அளிக்க வேண்டும். குறைந்தபட்ச பென்சன் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் தென்காசி மாவட்டத்தில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. தென்காசி தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலையில் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி முத்துப்பாண்டி, ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கற்பகம், போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி ஜோதி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட நிர்வாகி ரெங்கநாதன் ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 32 பெண்கள் உள்பட 102 பேரை போலீசார் தங்க வைத்தனர்.
பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில குழு உறுப்பினர் கணபதி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தங்கம், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச் செயலாளர் ஆரியமுல்லை ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்பட 44 பேரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு நடந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணை பொது செயலாளர் மகா விஷ்ணு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் குணசீலன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தாலுகா செயலாளர் ராமசாமி, பீடி தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூரில் சி.ஐ.டி.யு. நகர பொறுப்பாளர் ராஜசேகர் தலைமையில், எஸ்.டி.டி.யு. ஹக்கீம், ஏ.ஐ.டி.யு.சி. முத்துசாமி, தொ.மு.ச. ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, சுரண்டை, கடையம், சிவகிரி, ராயகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டத்தில் மட்டும் மறியலில் ஈடுபட்ட 781 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story