தஞ்சை மாவட்டத்தில் சராசரியாக நிவர் புயலால் 38 மி.மீ. மழை: 36 வீடுகள் சேதம்


தஞ்சை மாவட்டத்தில் சராசரியாக நிவர் புயலால் 38 மி.மீ. மழை: 36 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 27 Nov 2020 4:10 PM IST (Updated: 27 Nov 2020 4:10 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் சராசரியாக நிவர் புயலால் 38 மி.மீ. மழை பதிவானது. இந்த புயலுக்கு 36 வீடுகள் சேதம் அடைந்தன. 7 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. 20 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன.

தஞ்சாவூர்,

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை கரையை கடந்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. தஞ்சை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை முதலே மழை பெய்யத்தொடங்கியது. நேற்று அதிகாலை வரை இந்த மழை நீடித்தது.

அவ்வப்போது பலத்த மழையும் பெய்த வண்ணம் இருந்தன. நேற்று காலை முதல் மழை இன்றி லேசான வெயில் அடித்தது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. நிவர் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் அதிகாலை 1 மணிக்குப்பிறகு பலத்த காற்றும் வீசியது.

38 மி.மீ சராசரியாக மழை

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 38 மி.மீ. மழை பதிவானது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. புயல் காரணமாக ஏற்கனவே தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இதற்காக தஞ்சை மாவட்டத்தில் 251 இடங்களில் நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த புயல் காரணமாக போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை 10 மணிக்குப்பிறகு தான் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

36 வீடுகள் சேதம்

இந்த புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 34 கூரை வீடுகள் பகுதியாகவும், 1 கூரை வீடு முழுமையாகவும், 1 ஓட்டு வீடு பகுதியாகவும் என மொத்தம் 36 வீடுகள் சேதம் அடைந்தன. மாவட்டத்தில் 7 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவை உடனடியாக வெட்டி எடுக்கப்பட்டு அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த மழையினால் மாவட்டத்தில் 1 மாடு, 2 ஆடுகள் உயிரிழந்தன. மாவட்டத்தில் 20 இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதையடுத்து சாய்ந்த இடங்களில் மாற்று மின்கம்பங்களைக்கொண்டு சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றது. மழையினால் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் விளைந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இளம்நடவுப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்பட்டது. ஆனால் நேற்று மழை இல்லாததால் வெள்ளநீர் வடியத்தொடங்கியது.

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அணைக்கரை 85, மஞ்சளாறு 78, கும்பகோணம் 59, பாபநாசம் 51, திருவிடைமருதூர் 50, நெய்வாசல் தென்பாதி 46, அய்யம்பேட்டை 41, திருவையாறு 40, மதுக்கூர் 38, தஞ்சை 38, வெட்டிக்காடு 38, வல்லம் 34, குருங்குளம் 31, பட்டுக்கோட்டை 31, பூதலூர் 24, அதிராம்பட்டினம் 23, பேராவூரணி 13, ஈச்சன்விடுதி 5. 

Next Story