காணொலி காட்சி மூலம் குறைதீர்க்கும் கூட்டம்: குமரி மாவட்டத்தில் குளங்களை தூர்வார வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
குமரி மாவட்டத்தில் குளங்களை தூர்வார வேண்டும் என்று காணொலி காட்சி மூலம் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
நாகர்கோவில்,
கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி ரேவதி முன்னிலை வகித்தார்.
மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர்கள், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து காணொலி மூலம் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை கலெக்டர் அரவிந்திடம் தெரிவித்தனர். கடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 174 மனுக்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
குளங்களை தூர்வாருதல்
பொதுப்பணித்துறை மூலம் சானல்களில் தண்ணீர் வரத்து கால்வாய் மற்றும் குளங்களை தூர் வாருதல், குளங்களை ஏலம் விடுதல், பேச்சிப்பாறை அணை தூர் வாருதல், நீர்நிலை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் போன்ற கோரிக்கைகள் விவசாய பிரதிநிதிகள் சார்பில் வைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் கூட்டம் மீண்டும் நடத்திடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
குடிமராமத்து பணிகள் மற்றும் அறிவிக்கை செய்யப்பட்ட குளங்களில் விவசாய தேவைகளுக்கு வண்டல் மண் எடுத்தல் தொடர்பாகவும், கடைமடை பகுதிகளுக்கான பாசன தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு அப்பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க நீர்ப்பாசன சங்க தேர்தல் மற்றும் பயிர் காப்பீடு சம்பந்தமாகவும் விவசாய பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
கேள்விகளுக்கு பதில்
விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோர்ட்டு வழக்குகள் முடிந்ததும் பொதுப்பணித்துறை மூலம் குளங்கள் ஏலம் விடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை, கால்நடைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சத்தியஜோஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலாஜாண், பொதுப்பணித்துறை செயற்பெரியாளர் வசந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி மற்றும் அனைத்து தாசில்தார்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story