வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ரூ.400 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிப்பு


வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ரூ.400 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2020 2:10 PM GMT (Updated: 27 Nov 2020 2:10 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சுமார் ரூ.400 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகி கூறினார்.

நாமக்கல்,

விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும் திரும்பபெற வேண்டும். வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இந்த போராட்டம் காரணமாக வங்கி மற்றும் தபால்துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தபால் துறையில் 826 பேர் நேற்று வேலைக்கு வரவில்லை. இதனால் கிராமப்புறங்களில் உள்ள தபால் நிலையங்கள் மூடப்பட்டு இருப்பதை காண முடிந்தது. இதேபோல எல்.ஐ.சி.யில் வேலைபார்க்கும் 176 பேரும், மாநில அரசு ஊழியர்கள் 121 பேரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

வங்கி பணியாளர்களை பொறுத்த வரையில் மொத்தம் உள்ள சுமார் 1,500 பேரில் 885 பேர் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இதையொட்டி வங்கிகள் வெறிச்சோடி கிடந்தன.

பணபரிவர்த்தனை பாதிப்பு

இது குறித்து நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் இணை செயலாளர் வேங்கடசுப்பிரமணியம் கூறியதாவது:-

மாவட்டத்தில் மொத்தம் 145 தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் உள்ளன. எங்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இவற்றில் சுமார் 110 கிளைகளில் வழக்கமான பணிகள் நடைபெறவில்லை. இதனால் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் இந்த போராட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் பங்கேற்கவில்லை. இதனால் அந்த வங்கிகளின் கிளைகள் வழக்கம்போல் செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story